பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்ய ரூ.3500 கட்டணமா?: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தனியார் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை செய்ய தமிழக அரசு ரூ.3,500 கட்டணமாக நிர்ணயித்துள்ளதால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இலவச நடமாடும் பரிசோதனை கூடங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் வெறும் 7 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவச பரிசோதனை செய்ய முடியும் என்ற செய்தி அதிர்ச்சியாக உள்ளது. மேலும் அரசு நிர்ணயித்த தனியார் பரிசோதனைக்கூடம் கட்டணம் ரூ.3500 ஐ எத்தனை ஏழைகளால் கொடுக்க முடியும்.

தமிழ்நாடு அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தாலுகா மருத்துவமனைகளிலும், ரத்த பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அளவில் இரத்த பரிசோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்த முடியும். நடமாடும் பரிசோதனை கூடங்களை 108 ஆம்புலன்ஸ் வசதியுடன் கொண்டு செல்ல வேண்டும்.
அதுவரை தனியார் பரிசோதனை கூடங்கள் மக்களிடம் அதிக கட்டணம் வாங்கும் கட்டண கொள்ளையை தடுக்க அதனை கண்காணிக்க வேண்டும். தனியார் பரிசோதனை கூட கட்டணத்தை முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு மூலமாக வழங்க வேண்டும்.
டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் சிகிச்சைகள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி. உடனடியாக அரசு தலையிட்டு பன்றிக் காய்ச்சல், டெங்கு போன்ற கொள்ளை நோய்களை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். அதுவரை, தனியார் மருத்துவமனைகள் அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதனை மனதில் கொண்டு, கட்டணமில்லா பரிசோதனை செய்ய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
நோய்த்தாக்கம் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் உடனடியாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications