தேர்தல்: தமிழகத்தில் டாஸ்மாக் லீவ்... கள்ளச்சந்தையில் மது விற்பனை கனஜோர்
சென்னை: தமிழகத்தில் இன்று, சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, 14ம் தேதி முதல், மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருவொற்றியூர் பகுதியில், கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையிலும் மது விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக் கடைகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தோராயமாக டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.250 கோடியைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

திருவொற்றியூர் பகுதியில், இரு தினங்களுக்கு முன், சிலர் மதுபான வகைகளை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துள்ளனர். அவற்றை ஊருக்கு ஒதுக்குபுறத்தில் வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இங்கு மதுபானங்கள், மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. 80 முதல், 90 ரூபாய்க்கு விற்கப்படும் குவார்ட்டர், கள்ளச்சந்தையில், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மது பிரியர்கள், விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர்.
இதேபோல, பிற மதுபான வகைகள், அவற்றின் விலைக்கு ஏற்ப, மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மதுபான கடைகளை மூடியும் நேற்று, பலர் மது அருந்திவிட்டு, போதையில் கீழே விழுந்து கிடந்த நிகழ்வுகளும் நடந்தேறின.
சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் தமிழகம், புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளுக்கு சனிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையில் இருந்து 5 கி.மீ தூரத்தில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
ஆந்திராவில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள தடுக்குபேட்டை, சந்திரவாடா, நகரி டவுன் ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளும் 3 நாட்கள் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் கள்ளச்சந்தையில் அந்த ஊர்களில் தாராளமாக மது பாட்டில்கள் கனஜோராக விற்பனையாகிறது. ரூபாய் 85 மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் விலை ரூபாய் 150. எனவே திருத்தணி, பொன்பாடி, அத்திமாஞ்சேரி, பொதட்டூர்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து மதுப்பிரியர்கள் அங்குச் சென்று கூடுதல் விலைகொடுத்து வாங்கி வருகிறார்கள்.
இதனால், நகரி செல்லும் பேருந்துகளில் கூட்டநெரிசல் காணப்படுகிறது. அங்கே இருந்து இங்கே வாங்கி வரும் பானத்தை மேலும் கூடுதல் விலைக்கு விற்று சிலர் தற்காலிக தொழிலையும் தொடங்கி காசு பார்த்து வருகிறார்கள்.
இதேபோல கர்நாடகா - தமிழக மாநில எல்லையிலும் மது விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருவின் இருந்து வாங்கி வந்து ஒசூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலை முன்னிட்டு சனிக்கிழமை முதல் தேர்தல் நாளான மே 16 மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் மே 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தோராயமாக டாஸ்மாக் மதுவிற்பனை ரூ.250 கோடியைத் தாண்டியதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையில் மது பாட்டிகள் விற்பனை ரூ. 120 என்ற அளவுக்கும், வெள்ளிக்கிழமையன்று ரூ.130 கோடி என்ற அளவிலும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாளில் சராசரியாக ரூ.85 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் நிலையில் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட காரணத்தால் கடந்த 2 நாட்களில் மதுவிற்பனை 35 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications