பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்படுவார்.. வைத்திலிங்கம் அதிரடி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் எம்பி அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் அக்கட்சியின் அவசர பொதுக் குழு கூடி பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார்.
அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைந்துவிட்டன. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

11 பேர் கொண்ட குழு
மேலும் அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டன. அத்துடன் ஓபிஎஸ் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

சசிகலா நீக்கப்படுகிறார்
இந்த நிலையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் எம்.பி., அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக அதிமுகவின் அவசர பொதுக் குழு விரைவில் கூடும். அந்த பொதுக்குழு அதிகாரப்பூர்வமாக சசிகலாவை நீக்கும் என அறிவித்திருக்கிறார்.

அவசர பொதுக்குழு
ஓபிஎஸ் அணி இணைவதற்கு, சசிகலாவை நீக்க வேண்டும் என்பது பிரதான நிபந்தனையாக இருந்தது. இதை ஏற்று அதிமுக அவசர பொதுக்குழு விரைவில் கூட இருக்கிறது.

பொதுக்குழுவுக்குதான் அதிகாரம்
அதிமுகவில் பொதுச்செயலரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே உண்டு. ஆகையால் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
