நந்தினி உயிரைப் பறித்த திருடன் பெண் தாதாவுடன் சண்டை போட்டு கைதான பிரபல ரவுடியாம்!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் ஆசிரியை நந்தினி மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சாகர் ஆகியோரின் உயிரிழப்புக்குக் காரணமான கொள்ளையன் கருணாகரனுக்கு, யமஹா கண்ணன் என்ற செல்லப் பெயர் வேறு உண்டாம். சென்னையில் உள்ள ரவுடிகள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறதாம் இந்த கருணாகரனின் பெயரும்.
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஆசிரியை நந்தினி, தனது அத்தை மகளான நஜ்ஜு என்பவருடன் ஏடிஎம் சென்டரில் தனது சம்பளப் பணத்தை எடுக்கப் போயிருந்தார். பணத்தை எடுத்து விட்டுத் திரும்பியபோது வழிப்பறி கொள்ளையன் அவர்கள் வைத்திருந்த கைப் பையை (அதில் ரூ. 25,000 பணம் இருந்தது) பறித்துள்ளான்.
இதைப் பார்த்த நந்தினி திருடனை துரத்திப் பிடிக்க முயன்று தனது மொபெட்டில் துரத்தியுள்ளார். ஆனால் திருடன், அவரது மொபெட்டை காலால் உதைத்துத் தள்ளியதில் அது வேகமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நந்தினியும், அவரது மொபெட் மோதி சாகர் என்பவரும் உயிரிழந்தனர். நஜ்ஜு காயங்களுடன் உயிர் தப்பினார்.

கருணாகரன்
இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர் கொள்ளையன் கருணாகரன். அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார். போலீஸார் வந்ததால் கருணாகரன் உயிர் தப்பினார். கருணாகரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். அவர் குறித்த பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்குன்றம் சொந்த ஊர்
கருணாகரன் பெரியமேட்டில் வசித்து வருவதாக போலீஸாரிடம் முதலில் கூறியுள்ளார். ஆனால் போலீஸ் விசாரணையில் அது பொய் என்று தெரிய வந்தது. இதையடுத்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தியதில் தான் வசித்து வருவது செங்குன்றம் என்று உண்மையைக் கக்கியுள்ளார் கருணாநகரன்.

யமஹா கண்ணன்
கருணாகரன் பைக்கில் போய்த்தான் சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுவாராம். மேலும் இவருக்கு யமஹா பைக் என்றால் உயிராம். எனவே இவருக்கு யமஹா கண்ணன் என்ற செல்லப் பெயரையும் நண்பர்கள் வைத்துள்ளனர். வெறும் கண்ணன் என்றும் சிலர் கூப்பிடுவார்களாம்.

பெரிய ரவுடி
இந்த கருணாகரன் ரவுடிகள் லிஸ்ட்டிலும் இருந்து வருகிறார். செங்குன்றம், கொடுங்கையூர், ஓட்டேரி, பெரியமேடு, புளியந்தோப்பு என பல காவல் நிலையங்களில் 8 வழக்குகள் இருக்கிறதாம். எல்லாம் வழிப்பறி, செயின் ஸ்னாட்ச்சிங் கேஸ்தான்.

பெண் தாதாவுடன் கும்மாங்குத்து
கருணாகரன், அடிதடி ரகளையில் சிக்காத நாளே இல்லையாம். கடந்த ஜனவரி மாதம் கூட ஒரு பெண் ரவுடியுடன் பயங்கர மோதல் ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டாராம். அப்போது போலீஸ் வந்து சண்டையை விலக்கி விட்டு அவரைக் கைது செய்தது. பிப்ரவரி மாதம் இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

குண்டாஸ் பாயுமா?
கருணாகரன் ரவுடிகள் லிஸ்ட்டில் இருப்பதாலும், இரண் பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதாலும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவும் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications