கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் ஐடி, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் ரெய்டு!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவினர் இணைந்து இன்று சோதனை மேற்கொண்டனர். சில மணிநேரங்கள் நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் வந்து சோதனை நடத்தினர். அப்போது, கார்த்தி சிதம்பரம் உடன் இருந்தார். தொடர்ந்து அதிகாரிகள், கணக்குகளை ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. இந்தப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் அதன் சார்பு நிறுவனங்கள் மூலம் வாங்கிய நடவடிக்கையில் விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு ஏதுவாக அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையிலான அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் உதவி செய்துள்ளது என்பது சிபிஐயின் சந்தேகம்.

பண பரிவர்த்தனை
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் கைமாறுவதற்கு முன்னதாக, கார்த்தி சிதம்பரம் முக்கியப் பங்குதாரராக இருந்த அட்வான்டேஜ் ஸ்டராட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கும், ஏர்செல் டெலிவெஞ்சுர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ரூ.26 லட்சம் பணப் பரிவர்த்தனை நடந்ததை மத்திய வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

அமலாக்கத்துறை விசாரணை
இது தொடர்பாக விசாரணைக்கு வரும்படி அட்வான்டேஜ் ஸ்டராட்டஜிக் கன்சல்டிங் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிறுவனம், தமிழகத்தில் பிரபலமான வாசன் கண் மருத்துவமனையின் 1.5 லட்சம் பங்குகளை மறைமுகமாக வாங்கியதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது. இவை தொடர்பாக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரடி சோதனை
வாசன் கண் மருத்துவமனையின் உரிமையாளர், கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களில் சுமார் 15 இடங்களில் கடந்த 1ம் தேதியன்று வருமான வரித் துறை, மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய வங்கி ஆவணங்கள், கணக்குத் தணிக்கை ஆண்டறிக்கைகள், அவை தொடர்பான குறிப்புகள் இடம் பெற்ற குறுந்தகடுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. திருச்சியில் தனியார் மருத்துவமனையின் முக்கியப் பங்குதாரர்களில் ஒருவரான மருத்துவர் ஏ.எம். அருண் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மீண்டும் சோதனை
இந்த நிலையில் இன்று காலை இன்று காலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்திற்கு வந்த அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் பிற்பகல் வரை சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தியது காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
|
கார்த்தி சிதம்பரம் விளக்கம்
இதனிடையே அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ள கார்த்தி சிதம்பரம், தனது நண்பர்களின் நிறுவனங்கள் தொடர்பாக தன்னிடம் சில அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தானும், தனது குடும்பத்தினர்களும் வேறு எந்த நிறுவனத்திலும் பங்கு தாரர்களாக இல்லை என்றும், இது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இன்று விசாரணைக்கு வந்த அதிகாரிகள் தனது அலுவலகத்தில் எந்த வித ஆவணங்களையும் எடுத்துச்செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாசன் கண் மருத்துவமனை
இந்தியா, இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் 175 மருத்துவமனைகளை நடத்தி வருகிற வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தின் சில பணபரிவர்த்தனைகள் தொடர்பான அமலாக்கப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 2008ஆம் ஆண்டு அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு 1.5 லட்சம் பங்குகள் எப்படி விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரிக்கிறது.

ஒன்றரை லட்சம் பங்குகள்
இந்த அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்தில் 3-இல் 2 பங்கு பங்குகள் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதாக கருதப்படும் அஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்குரியவை. அட்வான்டேஜ் ஸ்டேடஜிக் கன்சல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு எந்த ஒரு பிரீமியமும் இல்லாமல் 1.5 லட்சம் பங்குகளை துவாரகநாதன் விற்பனை செய்த விவகாரம்தான் இப்போது பூதகரமாகியுள்ளது.

கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன தொடர்பு
இந்த பரிவர்த்தனையில் ஈடுபட்ட நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்துக்கு பங்குகள் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது என்று கூறினர். 2002ஆம் ஆண்டு அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் இந்த விசாரணையை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

தோண்டி துருவும் அமலாக்கப்பிரிவு
மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்கள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துடனான பணபரிவர்த்தனைகள் ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறும் துவாரகநாதனுக்கு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னை கேட்ட முகாந்திரம் இல்லை
அமலாக்கத்துறை சோதனை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், தனது நண்பர்கள் நேர்மையான முறையில் வர்த்தகம் செய்து வருகின்றனர் என்றும், அவர்கள் அதிகாரிகளின் சோதனைகளை எளிதில் கையாளுவார்கள் என்றும் கூறினார். எனக்கும் எனது நண்பர்களின் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை எனவே, என்னை கேள்வி கேட்கவோ, எனது நிறுவனத்தில் சோதனை செய்யவே அதிகாரிகளுக்கு ஆதராங்களோ, முகாந்திரமோ இல்லை என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications