வாழப்பாடி சிறுமி பலாத்காரம் செய்து கொலை: பெற்றோரிடம் மாநில குழந்தை நல ஆணையர் விசாரணை
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் மாநில குழந்தைகள் நல ஆணையர் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.
வாழப்பாடியை அடுத்த சென்றாயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் - பழனியம்மாள் தம்பதிகளின் மகள் பூங்கொடி (வயது 10). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இச்சிறுமியைக் கடந்த மாதம் 14-ந் தேதி இரவு மர்மக் கும்பல் ஒன்றுக் கடத்தி சென்றது. சில நாட்களுக்குப் பிறகு சிறுமியின் ஆடைகளற்ற உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப் பட்டது.
பிரேத பரிசோதனையில் பூங்கொடி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் பூபதி, பிரபாகர், ஆனந்த், ஆனந்தபாபு, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை வாழப்பாடி போலீசார் கைது சேலம் சிறையில் அடைத்தனர்.
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து தமிழக குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவகி ஆகியோர் பலியான சிறுமியின் பெற்றோரிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க தலைவர் பூமொழி உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வ அமைப்பினர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications