இளங்கோவன்-விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் நடுவே பயங்கர மோதல்! கலவர பூமியான காங். ஆபீஸ்
சென்னை: கோஷ்டி சண்டைக்கும், அதனால் ஏற்படும் சட்டை கிழியல்கள், மண்டை உடைப்புகளும் காங்கிரசுக்கு புதிது கிடையாது. காங்கிரசின் தலைமையகமாக சத்தியமூர்த்தி பவன், இந்த சம்பவங்களுக்கெல்லாம் மவுன சாட்சியாக நின்று பார்த்துக்கொண்டுள்ளது. இன்றும் அப்படி ஒரு ரண களம்தான் சத்தியமூர்த்தி பவன் அருகே அரங்கேறியது.
இம்முறை, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும், சமீபத்தில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட, விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்களுக்கும்தான் இந்த களறி ஏற்பட்டது.
களேபரத்திற்கு காரணம் இதுதான்: காங்கிரஸ் கட்சியின், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

நீக்கம்
தோல்வி பற்றி நிருபர்களுக்கு பேட்டியளித்த, விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் கட்சி பற்றி பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், விஷ்ணு பிரசாத்தை கட்சியில் இருந்து தடாலடியாக நீக்கினார்.

போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்ணுபிரசாத் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாகத்தான், இன்று மதியம் சத்தியமூர்த்தி பவன் முன்பு விஷ்ணுபிரசாத்தின் ஆதரவாளர்களான சண்முக சுந்தரம், ஜி.ஜி. இளங்குமரன், தளபதி பாஸ்கர், பயாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் திரண்டு இளங்கோவன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

அடி, உதை
அப்போது இளங்கோவன் ஆதரவாளர் ஒருவர் அதை செல்போனில் படம்பிடிக்கவே, அவரை விஷ்ணுபிரசாத் ஆதரவாளர் ஒருவர் அடித்து உதைத்தார். தகவல் அறிந்து கோபமடைந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியில் ஓடி வந்தனர்.

இரு தரப்பும் கோஷம்
விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவனுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டே இருந்ததை பார்த்த அவர்கள், இளங்கோவன் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். இதில், முன்னாள் மாநில செயலாளரும் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளருமான ஆலடி சங்கரய்யாவும் அடக்கம்.

உருவபொம்மை
இப்படியாக, இரு கோஷ்டிகளும் கோஷமிட்டுக்கொண்டிருந்தபோது, விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவனின் உருவபொம்மையில் பெட்ரோல் ஊற்றி அதை எரிக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களும் எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

கட்டுக்குள் கலவரம்
இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட முயன்றனர். நடுவே சிலர் கற்களையும் வீசி தாக்கினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எற்படவில்லை. போலீசாரின் தலையீட்டின்பேரில் 'கலவரம்' கட்டுக்குள் வந்தது.












Click it and Unblock the Notifications