கிருஷ்ணராஜசாகர் அணை நீர் மட்டம் வெகுவாக குறைவு... தமிழக காவிரி டெல்டா விசாயிகளுக்கு அபாய மணி
பெங்களூர்/ சென்னை: கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடி பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் இருப்பு மிக மோசமாக உள்ளது. கடந்த மாதம் கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. ஆகையால் அணையின் நீர்மட்டம் மிக மோசமாக உள்ளது. இந்த நிலைமையால் கர்நாடகா மட்டுமின்றி தமிழகமும் பாதிக்கப்பட உள்ளது என்கின்றனர் அம்மாநில அதிகாரிகள்.

தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் 11 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இருப்பினும் விவசாயத்துக்கு 3 டி.எம்.சி. நீர்தான் திறந்துவிடப்படும்; பெங்களூரு, மைசூர், மாண்டியாவின் குடிநீர் தேவைக்காக 4.5 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் இருப்புக்காக 4.5 டி.எம்.சி.நீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இதனால் தமிழகத்துக்கு மிக குறைவான அளவுதான் நீர் திறந்துவிடப்படுமாம்.. 2 வாரங்கள் கழித்தே இந்த நீர் திறந்துவிடப்பட உள்ளது. தமிழகத்தின் காவிரி கடைமடை பகுதிகளுக்கு இந்த நீர் திறப்பால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
இருப்பினும் நடுவர் மன்ற தீர்ப்பின்படி பில்லுகுண்டுவில் இருந்து 192 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆண்டு முழுவதும் பருவமழை சீராக இருந்தால்தான் இவ்வளவு நீரையும் கர்நாடகா திறந்துவிட முடியுமாம். வறட்சி காலங்களில் நீர் திறப்பு அளவு குறைவாக இருக்கும்.
இந்த ஆண்டு பில்லுகுண்டுவில் இருந்து 120 டி.எம்.சி. நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட உள்ளது. இதனால் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications