Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்த நகைகளை விற்று அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்திய 'ஆச்சரிய ஆசிரியர்' அன்னபூர்ணா!

விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக பள்ளி ஆசிரியர் அன்னபூர்ணா தனது சொந்த நகைகளை விற்று பணம் கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில வழிக் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆசிரியர் அன்னபூர்ணா சொந்த நகைகளை விற்று பணம் தந்திருப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

ஸ்மார்ட் போர்டுகள், மாணவர்கள் சௌகர்யமாக அமர்ந்து பயில சொகுசு நாற்காலி, ஆங்கிலத்திறனை மேம்படுத்த புத்தகங்கள் என ஹைஃபையாக இருக்கும் அந்த இடத்திற்கு சென்றதும் நாம் எங்கே இருக்கிறோம் என்ற வியப்பு தன்னை அறியாமலேயே தொற்றிக் கொள்ளும். ஆம்! விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ள கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் தான் இந்த உயர்தர கல்வி அம்சங்கள்.

இந்த அரசுத் தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு மாணவர்கள் பேசும் ஆங்கிலம் தனியார் பள்ளி மாணவர்களையே மிஞ்சிவிடும் வகையில் அமைந்துள்ளது. இந்த பெருமைகளுக்கெல்லாம் சொந்தக் காரரான அன்னபூர்ணா மோகனிடம் நேர்காணல் கண்டது தமிழ் ஒன் இந்தியா, அதன் விவரங்கள்....

தகர்ந்த டாக்டர் கனவு

தகர்ந்த டாக்டர் கனவு

அன்னபூர்ணா படித்தது எல்லாமே திண்டிவனத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தான். தன்னுடைய தந்தை டாக்டர் என்பதால் தானும் டாக்டராகவே விரும்பியுள்ளார். ஆனால் +2வில் போதுமான கட்ஆப் மதிப்பெண் இல்லாததால் டாக்டர் கனவு தகர்ந்து விட, பாதுகாப்பான துறை என்பதால் தந்தையின் தூண்டுகோலின் பேரிலேயே ஆரிசியர் பயிற்சியில் சேர்ந்ததாகச் சொல்கிறார் அன்னபூர்ணா

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு பலர் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் அன்னபூர்ணாவிற்கு மட்டும் படித்து முடித்த அடுத்த ஆண்டே அரசுப் பணி கிடைத்துவிட்டது. "நான் 2003ல் படிப்பை முடித்தேன் ஆனால் அடுத்த ஆண்டே எனக்கு ஆசிரியர் பணி கிடைத்துவிட்டது, பணியில் சேர்ந்ததும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கச் சொன்னார்கள்".

அழுது கொண்டே சென்றவர்

அழுது கொண்டே சென்றவர்

டவுன் வாழ்க்கையே பழக்கப்பட்ட அன்னபூர்ணாவிற்கு ஒன்றாம் வகுப்பில் அதிலும் கலைந்த தலை, சளி மக்குடன் இருந்த குழந்தைகளை பார்த்து பிடிக்கவில்லையாம். நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் முன் தந்தை ஆறுதல் படுத்துவாராம் அன்னபூர்ணாவை... "தினமும் பள்ளி செல்ல அழும் பிள்ளைகளைப் போலவே நானும் தினமும் அழுது கொண்டே பள்ளிக்குச் செல்வேன், என்னை ஆறுதல்படுத்துவதே அப்பாவிற்கு தினமும் வேலை. ஒரு கட்டத்தில் ஆசிரியர் பணி வேண்டாம் என்று வேறு பணிக்காக எம்பிஏ மனித உரிமைகள் படிப்பையும் முடித்துவிட்டேன்".

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்

எடுத்த எடுப்பில் கிடைத்த அரசுப் பணியை விட்டு விட மனமில்லாமல் பள்ளிக்கு சென்று வந்த ஆசிரியர் அன்னபூர்ணா, தான் பயின்ற ஆங்கிலத்தை தொடர்ந்து பேச வாய்ப்பில்லாததால் தனக்கே மறந்து விடுமோ என்று அச்சமடைந்துள்ளார். இதனால் அடுத்தடுத்து பல்வேறு கிண்டல்களுக்கு மத்தியிலும் மாணவர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசி வந்துள்ளார். "பள்ளியில் நான் நுழைந்த காலை 9 மணி முதல் மாலை வீடு திரும்பும் வரை ஆங்கிலத்திலேயே பேசினேன், இதைப் பார்த்து சக ஆசிரியர்கள் தமிழில் பேசுவதே புரியாதவர்களிடம் ஆங்கிலம் பேசுகிறாயே என கிண்டல் செய்தனர். ஆனால் நான் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாதன் பயன் கொஞ்ச நாளிலேயே தெரிய ஆரம்பித்தது. ஆம், மாணவர்கள் நான் பேசுவதை புரிந்து கொண்டு பதிலளிக்கத் தொடங்கினர்" என்கிறார்.

விதைத்தால் தான் அறுவடை

விதைத்தால் தான் அறுவடை

மாணவர்களின் ஆர்வம் ஆசிரியர் அன்னபூர்ணா மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை பயிற்றுவிப்பதை முழு மூச்சாக எடுத்து செயல்பட்டுள்ளார்.

இதன் விளைவாக அழகுத் தமிழில் மட்டுமே பேசிய மாணவர்கள், திறன் வளர்க்கும் ஆங்கிலத்திலும் வெளுத்துக் கட்டத் தொடங்கியுள்ளனர். ஒரு மாணவியின் ஆங்கிலப் பேச்சை முகநூலில் பதிவேற்றம் செய்ய அது வைரலாகி மாணவர்களுக்கும், ஆசிரியர் அன்னபூர்ணாவிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செதுக்கினால் தான் சிற்பம்

செதுக்கினால் தான் சிற்பம்

"குழந்தைகள் களிமண் போன்றவர்கள் அவர்களை நாம் எப்படி செதுக்குகிறோமோ அப்படித் தான் வடிவம் கிடைக்கும் என்பதை மாணவர்கள் எனக்கு உணர்த்தினார்கள். அவர்கள் காட்டும் ஆர்வம் என்னையும் தூண்டியதால் மாணவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும்" என்ற எண்ணம் எழுந்தததாக நெகிழ்கிறார் அன்னபூர்ணா. "என்னுடைய மாணவர்கள் சாதாரண ஆங்கிலம் பேசுபவர்கள் அல்ல பிரிட்டிஷ் இங்கிலீஷை சரியான உச்சரிப்போடு பேசுபவர்கள், மற்றவர்கள் ஆங்கிலத்தை தவறாக உச்சரித்தால் அந்த குற்றத்தை கண்டுபிடித்து என்னிடம் சொல்லும் அளவுக்கு திறன் வளர்ந்தவர்களாகவே அவர்கள் மாறியுள்ளனர்.

நகைகளை விற்று

நகைகளை விற்று

இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமே என்று தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கி பணத்திற்காக அடுத்தவர்களை அணுகாமல் என்னுடைய சொந்த நகைகளை விற்று ஒரே வாரத்தில் இந்த வகுப்பறையை உருவாக்கினேன். இப்போது மாணவர்களுக்கு நாடகம், வீடியோ என உயர்தர கல்வியை வழங்குவதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது" எனச் சொல்கிறார் அன்னபூர்ணா.

நெகிழ்ந்த மாணவர்கள்

நெகிழ்ந்த மாணவர்கள்

மாணவர்களின் ஆங்கிலப் புலமையை பாராட்டி நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தபால் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் 10 ரூபாய் அனுப்பினார், இதை அவர்களே வாங்கிய போது மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இதே போன்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் மாணவர்களுக்கு பேட்மிண்டன் ராக்கெட் அனுப்பினார் இவையெல்லாம் அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. குழந்தைகளும் தெய்வமும் ஒன்று என்பார்கள் முகம் தெரியாத நபர்கள் கொடுத்த பரிசுகளைப் பெறும்போது அந்தக் குழந்தைகளின் கண்களில் பேரானந்தத்தை பார்க்க முடிந்ததாக வியக்கிறார் அன்னபூர்ணா. தொடர்ந்து இந்த மாணவர்களுக்காக தனது ஆசிரியர் பணியைத் தொடரப் போவதாகவும் கூறுகிறார் பொன் நகைகளை விற்று மாணவர்களின் புன்னகைக்கு காரணமான அரசுப் பள்ளி ஆசிரியர் அன்னபூர்ணா மோகன்.

நோ தனியார்பள்ளி மோகம்

நோ தனியார்பள்ளி மோகம்

இவரைப் போலவே மற்ற ஆசிரியர்களும் தங்களது பணியை வெறும் ஊதியத்திற்காக வேலை பார்ப்பதாக பார்க்காமல் அர்ப்பணிப்புடனும், பேரார்வத்துடனும் செய்தால் அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என்ற பாகுபாடும் இருக்காது. வசதி குறைவு, கல்வித் தரமில்லை என்று தனியார் பள்ளிக்கு முன்டியடித்து லட்சக்கணக்கில் பணத்தைகொட்டிக் கொடுத்து கல்வித் தந்தைகளை உருவாக்கும் பெற்றோருக்கும் பாடம் புகட்ட முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+