திருப்பதி கோவிலில் படாதபாடுபட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
திருப்பதியில் தமக்கு ஆந்திரா போலீசார் உரிய பாதுகாப்பு தரவில்லை என தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமக்கு உரிய பாதுகாப்பு தரப்படவில்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் இரவு திருப்பதி சென்றார். அவருடன் மொத்தம் 9 பேர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர்.
பொதுவாக அமைச்சர்களுக்கு எல்-1 தரிசன டிக்கெட்டை தேவஸ்தானம் வழங்கும். இதன்படி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடன் வந்த 6 பேருக்கு எல்-1 டிக்கெட்டை தேவஸ்தானம் கொடுத்தது.

வாக்குவாதம்
ஆனால் அனைவருக்கும் எல்-1 டிக்கெட் வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வேறுவழியில்லாமல் எல்-1 டிக்கெட்டை அனைவருக்கும் கொடுத்தது தேவஸ்தானம்.

பத்திரிகையாளர் சங்கம்
இதையடுத்து நேற்று அதிகாலையில் ஏழுமலையானை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அவரது ஆதரவாளர்களும் வழிபட்டனர். பின்னர் நேராக திருப்பதி பத்திரிகையாளர்கள் சங்கத்துக்கு திடீரென அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்றார்.

நடுரோட்டில்...
அங்கிருந்த செய்தியாளர்களிடம், சித்தூரில் நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர். என்னையும் உதவியாளர்களையும் நள்ளிரவில் நடுரோட்டில் தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.

அச்சுறுத்தல்
என்னை தாக்கி கடத்திச் செல்லக் கூடிய அச்சுறுத்தல் இருந்தது. இருந்தபோதும் ஆந்திர போலீசார் எனக்கு போதுமான பாதுகாப்பை தராதது கண்டனத்துக்குரியது என கூறினார். தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த திடீர் குற்றச்சாட்டில் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications