Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அமைச்சர்கள் மீது குவியும் புகார் செய்திகள்... விளக்கம் தருவாரா ஜெ.? கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சர்கள் குறித்து தொடர்ச்சியாக வருகின்ற செய்திகள் குறித்து முதல்வர் மற்றும் அரசின் விளக்கம் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசில் என்ன தான் நடக்கிறது? கடந்த 5 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீது எல்லாம் அவ்வப்போது பல்வேறு புகார்கள் வெளிவந்தன. குறிப்பாக மின்துறை அமைச்சர் மீது பல கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எல்லாம் பூர்வாங்க ஆதாரங்களுடன் கூறப்பட்டன. அப்போது எல்லாம் முதல்வர் ஜெயலலிதா அவற்றைக் கண்டுகொள்ளாமல் பாராமுகமாகவே இருந்தார். தற்போது என்ன நிலைமை?

TN ministers controversies - karunanidhi questions Jayalalitha

அன்றாடம் வருகின்ற செய்திகள் எத்தகையவை? அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில், ஏன் 2 முறை நீதிமன்ற நடவடிக்கைகளால் ஜெயலலிதா பதவியிலிருந்து இறங்க வேண்டிய நேரத்தில் முதல்வராகவே இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இன்றும் அவர்தான் நிதி அமைச்சர். ஆனால் அவருடைய கதி என்ன?

ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மூன்று அமைச்சர்களும் மாநிலம் முழுவதும் பலரிடம் எம்.எல்.ஏ. சீட் வாங்கித்தருவதாக கோடி, கோடியாக வசூல் செய்திருப்பது அன்றாடம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த 3 அமைச்சர்களும் சென்னையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று கார்டன் உத்தரவிட்டுள்ளதாம். அதோடு, இவர்கள் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை ஆணையாம்.

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அ.தி.மு.க. மீனவர் பிரிவு துணைச் செயலாளர் டி.ரமேஷ், வேளச்சேரி எம்.எல்.ஏ.அசோக், தேனி மாவட்டம் எல்லப்பட்டி முருகன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள் சின்னையா, தண்டரை மனோகரன், விஜயபாஸ்கர், தாம்பரம் கரிகாலன், வரகூர் அருணாசலம் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

நத்தம் விசுவநாதனின் நெருங்கிய நண்பரான பழனி நகரச் செயலாளர் கே.மாரியப்பன் பதவியும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.எம்.பாபுவின் மாவட்ட செயலாளர் பதவியும், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்த டி.ஆர்.என்.வரதராஜன், தேனி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்த ஆர்.ஆர்.ஜெகதீஷ், ஆண்டிப்பட்டி ஒன்றியம் மாவட்ட பிரதிநிதி பொறுப்பில் இருந்த எம்.ராஜ்குமார் ஆகியோர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டு வந்த சீனி கந்தசாமி, போயஸ் கார்டன் முன்னாள் ஊழியர் ரமேஷ்குமார், சிவகாசியைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்களான திண்டுக்கல் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் தர்மலிங்கம், சாணார்பட்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மணி என்கிற சுப்பிரமணி, நத்தம் சட்டமன்ற தொகுதி பொதுக் குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ் ஆகியோரது பதவிகள் பின்னர் பறிக்கப்பட்டன.

இதில் மேட்டுக்கடை செல்வராஜ், நத்தம் விஸ்வநாதனின் மருமகனும், மாவட்ட பொறுப்பாளருமான கண்ணனின் நெருங்கிய நண்பர். கண்ணனின் பினாமி என்று அழைக்கப்படுபவர். தூத்துக்குடியில் அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியை தூத்துக்குடி போலீசார் கைது செய்திருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் ஓ.பி.எஸ். பினாமியாக செயல்பட்ட அரசு ஒப்பந்தக்காரர், ஆர்.எஸ்.முருகன் மீது பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அவர் தலைமறைவாக உள்ளார்.

இந்த செய்திகள் பற்றி அரசின் விளக்கம் என்ன? இதே அமைச்சர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் மீதும் எதிர்க்கட்சிகள் கடந்த 5 ஆண்டு காலமாக புகார்களையெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துக்கூறிய போது அதைப் பற்றி முதல்வர் காதில் போட்டுக்கொண்டாரா? தற்போது அந்த புகார்கள் எல்லாம் உண்மை என்று ஆகிவிட்ட நிலையில், இதற்காக இந்த அரசு மக்களுக்கு தருகின்ற விளக்கம் என்ன? ஓர் அரசில் அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்பு. அமைச்சர்கள் தவறு செய்தால், அந்த தவறுகளுக்கு முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த 5 ஆண்டு காலத்தில் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்?.

அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள் என்றால், அமைச்சர்கள் தவறுகளும், முறைகேடுகளும் செய்த காரணத்தால்தான் மாற்றப்பட்டார்கள். அப்படி மாற்றப்பட்ட அமைச்சர்கள் சிலரே பிறகு மீண்டும் அமைச்சர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அப்படியென்றால் அவர்கள் ஏற்கனவே செய்த தவறு என்ன ஆயிற்று? முறைகேடுகள் செய்த அமைச்சர்களை நீக்குவதும், பின்னர் அந்த முறைகேடுகள் மக்களுக்கு மறந்து போனதும் மீண்டும் சேர்த்துக்கொள்வதும் தொடர்ந்து நடந்தது தானே? பொதுமக்களின் நினைவாற்றல் குறைவானது என்பதை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள்?.

ஓர் அமைச்சரவையில் தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்த கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்த கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா?. தொடர்ச்சியாக நடக்கும் நாடகங்களைப் பற்றியும், இந்த வேடிக்கை வினோதங்களைப் பற்றியும் எல்லாம் பொதுமக்களிடம் விளக்கம் அளித்து நினைவூட்டிட வேண்டியது தி.மு.கவினரின் கடமை அல்லவா?. இன்னும் நடக்கப்போகின்ற வேடிக்கைகள், வினோதங்கள், ஏமாற்று நாடகங்கள் ஏராளம், ஏராளம். வரப்போகின்ற காட்சிகளையும், அவற்றின் உட்பொருளையும் சேர்த்துப் பொதுமக்களிடம் கொண்டு போய்த் தெளிவுபடுத்த வேண்டியது தி.மு.க.வினரின் கடமை" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+