ராகுலை ஊழல்வாதி என்பதா.. கெஜ்ரிவாலுக்கு ஞானதேசிகன் கடும் கண்டனம்- 2 நாள் போராட்டம்
சென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, ஊழல்வாதிகள் பட்டியலில் சேர்த்து கெஜ்ரிவால் பேசியிருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைக் கண்டித்து 2 நாள் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து.. ராகுலையும் கடிச்சுட்டாரே
துரதிருஷ்டவசமாக பொறுப்பற்றவர்கள் கூட முதல்வராக வர முடியும் இந்த ஜனநாயகத்தில் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனை கடிப்பதைப் போன்று, இன்று எங்களுடைய தலைவர் ராகுல்காந்தியையும், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் எங்கள் மக்கள் தலைவரின் புதல்வர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலபேர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியிருக்கிறார்.

போதி மரத்துப் புத்தனோ...
தன்னைத் தானே அரிச்சந்திரனாக, போதி மரத்துப் புத்தனாக சுவீகரித்துக் கொண்டு நாட்டில் உள்ள அத்தனை பேரும் கெட்டவர்கள் போலவும் இவர் ஒருவர் மட்டும்தான் இந்த நாட்டை வாழ்விக்க வந்த மகாத்மா போலவும் கருதிக் கொண்டு, பொது வாழ்வில் இருப்பவர்கள் மீது சேற்றை அள்ளி வீசியிருக்கிறார்.

பாவனை அரசியல்வாதி கெஜ்ரிவால்
எந்த அரசியல் சட்டம் கெஜ்ரிவாலை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க அனுமதித்ததோ, அந்தக் குடியரசு தினத்தை ரோட்டில் உட்கார்ந்து தடுக்கப் பார்த்தார். எல்லோரையும் ஊழல்வாதிகள் என்று சொல்வதன் மூலம் தான் ஒரு புனிதன் என்று மக்கள் நினைக்க வேண்டும் என்கிற பாவனையில் கெஜ்ரிவால் அரசு நடத்துகிறார்.

'தேசபக்தர்கள்'
இந்தியத் திருநாட்டில் இணைந்த காஷ்மீரில் மக்கள் விருப்பம் என்ன என்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேசிய பிரசாந்த் பூஷன் போன்ற 'தேசபக்தர்களை' பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அரசியல் நடத்துகிறார் கெஜ்ரிவால்.

அப்படியே மிதக்கிறார்..
ஊடகங்களும், பத்திரிகைகளும் அதிக வெளிச்சம் கெஜ்ரிவாலுக்கு தருவதால் அடுத்து இந்த நாட்டின் பிரதமராக, தான் வந்து விட்டதாக கெஜ்ரிவால் மிதக்கிறார். அரசியலில் பக்குவமும், பண்பும், அமைதியும், ஆர வாரமில்லாத செயல்பாடும் இருக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற போக்கு அரசியலில் வெகுநாள் தாக்குபிடிக்க முடியாது என்பதை கெஜ்ரிவால் உணர வேண்டும்.

உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்
வாசன், கெஜ்ரிவால் குற்றச்சாட்டிற்கு பதில் தந்துவிட்டு உடனடியாக இந்த குற்றச்சாட்டை திரும்ப பெற்று விட்டு, மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன் என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

துடிக்கிறார்
காங்கிரஸ் ஆதரவோடு டெல்லியில் ஆட்சி நடத்தும் கெஜ்ரிவால் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் எப்படியாவது பதவியை விட்டு போக வேண்டும் என்று துடிக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டால் நிம்மதியாக பழியை காங்கிரஸ் மீது போட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் டெல்லி தெருக்களிலே தானே முன்னின்று போராட்டம் நடத்தினார். ஆனால் அது நடக்கவில்லை.

இழிவுபடுத்த நினைக்கிறார்
இப்போது ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி கோபப்படாதா? ஆதரவை விலக்கிக் கொள்ளாதா? இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை இழிவு படுத்தலாம், தானும் ஆட்சி நடத்தவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதற்குத்தான் இந்தக் குற்றச்சாட்டு.

ஜனநாயகத்துக்கு நல்லதில்லை
ஒரு முதல்வவர் பொறுப்பற்ற முறையில் ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் இப்படி புழுதியை வாரித் தூற்றுவது என்பது இந்திய ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.

தமிழகம் முழுவதும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம்
எனவே காங்கிரஸ் கமிட்டி சார்பாக வருகிற 4-ந்தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிராக நிலுவையில் உள்ள 6 மசோதாக்களை நிறைவேற்றிட பாராளு மன்றத்தை நடக்க அனுமதிக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

5ம் தேதி சென்னையில்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பற்ற முறையில் ராகுல்காந்தியையும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களையும் பேசியிருப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் 5-ந்தேதி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications