வேலூரில் வெயிலை விடுங்க..இத்தனை பெஸ்ட் இடங்களா? வாயை பிளக்க வைக்கும் வேலூர்.. ஒருமுறை போய்ட்டு வாங்க
சென்னை: வேலூர் என்றாலே வெயில்தான் பீதியை கிளப்பிவிடுகிறது. தமிழகத்திலேயே வெயிலும், குளிரும் அதிகம் தாக்கக்கூடிய மாவட்டமாக வேலூர் இருந்து வருகிறது. அதேசமயம், சுற்றுலா பயணிகள் சென்று பார்க்கக்கூடிய மாவட்டத்தில் தவிர்க்க முடியாத மாவட்டமுமாகும். என்ன காரணம்?
கண்ணை கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்த இடங்கள் இந்த மாவட்டத்தில் கிடையாது.. ஆனால், அதேசமயம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இது தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டமும் ஆகும்.
கோட்டை: இதில் முதலில் இடம்பெறுவது வேலூர் கோட்டை.. 16 நாயக்கர் காலத்தில் (விஜயநகர பேரரசு) கட்டி முடிக்கப்பட்ட இந்த கோட்டை இப்போது வரை அதே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் எனப்படும், சிப்பாய் கலகம் 1806ம் ஆண்டு இந்த கோட்டையில்தான் துவங்கியது.. வேலூர் பழைய பஸ் ஸ்டாண்டு எதிரே இந்த கோட்டை அமைந்திருக்கிறது. பிரதான ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோட்டை, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது..

இது கிரானைட் கோட்டையாகும். முதலைகள் நிறைந்த ஆழமான அகழியால் சூழப்பட்டுள்ளது.. இந்த கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இங்கு படகு சவாரி வசதியும் உள்ளது. இந்த கோட்டையை சுற்றி மூன்று பக்கமும் அகழி வெட்டப்பட்டுள்ளது. ஒரே ஒரு பக்கம் மட்டும் வாசல் இருக்கிறது. இதில்தான் உள்ளே போக முடியும், வெளியே வர முடியும்.
இந்த கோட்டைக்கு செல்ல படிக்கட்டுகள் எதுவும் இல்லை.. கரடு முரடான பாதையில்தான் ஏறிப்போக வேண்டும். மலையின் உச்சியில் சிதிலமடைந்த ஒரு கோட்டை இருக்கும். பாழடைந்த கிணறு ஒன்றும் உள்ளது.. ஆனால், அதில் தண்ணீர் இல்லை என்பதால், உள்ளே இறங்கி பார்க்கலாம் கிணற்றின் பக்கவாட்டு சுவர்களில் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மைசூர் கோட்டை:
திப்புவுக்கும் இந்த கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவரது உறவினர்கள் பலர் இந்த கோட்டையில்தான் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் வேலூர் கோட்டைக்கு அச்சுறுத்தல் ஆற்காடு பகுதியிலிருந்தே வந்தது. அதனால், இதனை கண்காணிக்கவே, இப்படியான கோட்டை கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கோயில்:
வேலூர் கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது. ஜலகண்டேஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் ஒரு அசாதாரண திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய சிக்கலான கல் தூணைக் கொண்டுள்ளது மற்றும் கோயிலின் கூரையில் சிக்கலான வேலைப்பாடுகள் உள்ளன.
அதேபோல, இன்னொரு சிறப்பான இடம் ரத்தனகிரி முருகன் கோயிலாகும். 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் மலையின் மேல் அமைந்துள்ளது. முருகப்பெருமானை தரிசிக்க, தினமும் நூற்றுக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பழங்கால சாஸ்திரத்தின்படி, மலை இருக்கும் இடத்தில் முருகன் இருக்கிறார். இது வேலூர் நகரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது.

கோடைகாலம்:
அதேபோல வேலூர் நகரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அமிர்தி காடும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.. இந்த மலைகளில் அருவிகள் உள்ளதால், கோடை காலங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் தாராளமாக சென்று வரலாம்..
அடுத்ததாக, ஸ்ரீலட்சுமி பொற்கோயில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. இது தங்கத்தாலேயே செய்யப்பட்ட அற்புதமான அமைப்பாகும்.. தங்க முலாம் பூசப்பட்ட கட்டிடக்கலையே, இந்த கோவிலின் மிக அற்புதமான அம்சமாகும்.. முழு கட்டிடமும் தங்க இலைகளால் பூசப்பட்டுள்ளது.. இதற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானதாம்.. இதற்காக பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு 1500 கிலோகிராம் ஆகும்..
தேவாலயம்:
வேலூரில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்று செயின்ட் ஜான்.. இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயம் ஆகும்.. வேலூரில் உள்ள மிகவும் பிரபலமான மத மற்றும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் . இந்த தேவாலயம் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையது..
பெரியார் பூங்கா வேலூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்று.. அழகுபடுத்தப்பட்ட தோட்டங்கள், நீரூற்றுகள், நன்கு ஏற்றப்பட்ட ஜாகர் பாதை உட்பட பல்வேறு வசதிகளுடன் காட்சி தருகிறது.. வசீகரமான நடைபாதைகள் உள்ளன.. உட்காரும் பெஞ்சுகள்கூட அழகியலுடன் காணப்படும்.. வள்ளி மலை கோயிலும் சுற்றி பார்க்க ஏற்ற இடமாகும். வேலூரிலிருந்து பொன்னை செல்லும் வழியில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த வள்ளிமலை ஒரு சமண கோயிலாகும்.
கி.பி 9ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயிலில் சமண சமயத்தில் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் புடைப்பு சிற்பமும் பத்மாவதி இயக்கி அம்மனின் புடைப்பு சிற்பங்களும் காணப்படுகிறது. காலப்போக்கில் இதனை இந்து சமயம் தனதாக்கிக்கொண்டது. அதன் பின்னர் இந்த மலை வள்ளிமலையாக பெயர் உருவானது. இதுதவிர, ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் தென்னிந்திய கோவில் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
நீர்வீழ்ச்சி:
கைகால் நீர்வீழ்ச்சி என்பது, கைகால் கிராமத்தில் இருந்து 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி இயற்கையானது.. 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. கவுண்டினியா வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக ஓடும் 2 நீரோடைகளில் ஒன்றான கைகால் ஓடையால் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. காடுகளைச் சுற்றியுள்ள பகுதி அடர்த்தியாகவும், அழகாகவும், அமைதியானதாகவும் இருப்பதால், கோடைக்காலத்தில் இது ஒரு சிறந்த சுற்றுலா இடமாக திகழ்ந்து வருகிறது.

அதேபோல மற்றொரு குறிப்பட பட வேண்டிய இடம் டெல்லி கேட். இது தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காடு பகுதியில் அமைந்திருக்கிறது. இது இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது தவிர விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயிலும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் நேரம் காட்டும் சூரிய கடிகாரம் ஒன்றும் இருக்கிறது.
கடிகாரம்:
அந்த காலத்தில் கடிகாரத்தில் நேரம் பார்க்கும் பழக்கம் யாருக்கும் கிடையாது.. ஆனால், அரசர், தளபதிகள் உள்ளிட்ட முக்கிய ஆட்கள் மட்டுமே நேரம் பார்க்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். எனவே இந்த கோயில் அரசருக்கு மிகவும் நெருக்கமான கோயிலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆய்வகம்:
நகரத்தின் தொலைநோக்கி என்று அழைக்கப்படும் இந்த வானியல் ஆய்வகம் வேலூர் சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.. 100 ஏக்கர் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த ஆய்வகத்தில் 93 அங்குல தொலைநோக்கி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கி இங்கு உள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர்க்கவே கூடாத வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மாவட்டம் வேலூர் ஆகும்.












Click it and Unblock the Notifications