Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலுக்கு வருகிறார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உதயகுமார்?

Subscribe to Oneindia Tamil

இடிந்தகரை: தமிழன்னையைக் காப்பாற்ற புதிய மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள், புதிய மருந்துகள் அவசியமாகின்றன, புதிய அரசியல் பாதை அவசிய பாதை தேவை என்று கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் சுப. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடித வடிவில் பல்வேறு முந்தைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து எழுதியுள்ளார்.

உதயக்குமாரின் கடித விவரம்...

கேடு கெட்டவர்களின் கடைசிப் புகலிடம்

கேடு கெட்டவர்களின் கடைசிப் புகலிடம்

அரசியல் என்பது கேடுகெட்டவர்களின் கடைசிப் புகலிடம்" என்றார் அறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. நமது தமிழ் நாட்டிலுள்ள கழகக் கண்மணிகளையும், காவிகளையும், கதர்களையும் பார்த்தால், இது மிகவும் உண்மை என்பது புரியும். இம்மாதிரி "பேய்களுக்கு வாழ்க்கைப் பட்டால் பிணம் தின்றே தீர வேண்டும்" என்பதுதான் நமது பரிதாபகரமான நிலை.

பிணம் தின்னாமல் பெருமையுடன் வாழ்வது எப்படி

பிணம் தின்னாமல் பெருமையுடன் வாழ்வது எப்படி

மின்னியாபலிஸ், 1998: அரசியலில் முனவர் பட்டம் பெற்றிருக்கும் எனது நீண்டநாள் கேள்வி சாதாரண, சாமான்ய மக்கள் பிணம் தின்னாமல் பெருமையுடன் வாழ்வது எப்படி என்பதுதான். அமெரிக்காவில், மின்னியாபலிஸ் நகரில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அங்கிருந்து இந்தியாவை, தமிழகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். நம் மக்கள் பிணம் தின்னாமல் தப்பிக்க, பேய்களை திருத்துவது ஒன்றுதான் சிறந்த வழி என்று நினைத்து 1998-ஆம் ஆண்டு "அரசியல்வாதிகளுக்கானப் பள்ளி" (School for Politicians) என்ற இணையதளப் பள்ளி ஒன்றைத் துவங்கி பல பாடங்களை அந்தத் தளத்தில் அரங்கேற்றினேன்.

பாஜக அரசு கங்காணி

பாஜக அரசு கங்காணி

பல்வேறு அரசியல் சித்தாந்தங்கள் பற்றிய விவரணம்; பற்பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள்; சட்டமன்ற, நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் என நிறைய தகவல்களை, விபரங்களை வெளியிட்டேன். பல இளைஞர்கள் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புகொண்டு, அந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். பின்னர் 1998 மார்ச் மாதம் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தபோது, "பா.ஜ.க. அரசு கங்காணி" (BJP Government Watch) எனும் அமைப்பை என். ராம் போன்ற பல நண்பர்களின் உதவியுடன் துவங்கி நடத்தினேன்.

பிறந்தது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு அமைப்பு

பிறந்தது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு அமைப்பு

நாகர்கோவில், 2001: விடுமுறைக்காக 1999-ஆம் ஆண்டு ஊருக்கு வந்திருந்தபோது, நாகர்கோவில் நண்பர்கள் அசுரன், போஸ், லிட்வின் போன்றோர் சேர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஓர் அமைப்பைத் துவங்கினோம். 2001-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு, தமிழகத்துக்கு நிரந்தரமாகத் திரும்பியதும், கூடங்குளம் பிரச்சினையை எந்த அரசியல் கட்சியும் கையில் எடுக்காமல் இருப்பதுதான் பெரும் பின்னடைவாகத் தோன்றியது.

நாளிதழ்களில் தரப்பட்ட விளம்பரம்

நாளிதழ்களில் தரப்பட்ட விளம்பரம்

எந்த அரசியல் கட்சியோடும், அவர்களின் தலைமையோடும் தொடர்பில்லாமல் இருந்ததால், நாமே ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவதுதான் ஒரே வழி என்றுணர்ந்து, செப்டம்பர் 21, 2001 தேதியிட்ட பல நாளிதழ்களில் ஒரு விளம்பரம் கொடுத்தேன்: "கூடங்குளம் அணுமின் நிலையம் குமரி மாவட்ட மக்களைப் பெரிதும் பாதிக்கலாம் என்பதை நாமறிவோம்.

கன்னியாகுமரி பசுமைக் கட்சி

கன்னியாகுமரி பசுமைக் கட்சி

பேச்சிப்பாறைத் தண்ணீர் இழப்பு, கதிர்வீச்சு, புற்றுநோய், ஊனமானக் குழந்தை பிறப்பு, கடலால் சூழப்பட்டு தப்பியோட முடியாத நிலை என பல பாதிப்புக்கள் எழலாம். சென்னை, டில்லி வாழ் அரசியல் தலைவர்களும், அவர்தம் கட்சிகளும் நம்மைப் பற்றி கவலைப்படவில்லை. இந்நிலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வாழ்வுக்கேற்ற அபிவிருத்தி, அகிம்சை, மனித உரிமை தோய்ந்த கன்னியாகுமரி பசுமைக் கட்சி (Kanyakumari Green Party) ஒன்றினை நிறுவி கூடங்குளம் பிரச்சினையை குமரி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது கட்டாயமாகி விட்டது."

35 தோழர்களோடு

35 தோழர்களோடு

செப்டம்பர் 23, 2001 அன்று இந்திய பசுமைக் கட்சி-கன்னியாகுமரி (Green Party of India-Kanyakumari) எனப் பெயரிட்டு சுமார் 35 தோழர்களோடு இந்தக் கட்சியைத் துவங்கினேன். ஓரிரு மாதங்கள் கழித்து அய்யா ஒய். டேவிட், அய்யா ஜார்ஜ் கோமஸ், முனைவர் லால் மோகன் போன்றோர் சேர்ந்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைத் (PMANE) துவங்கினோம். பசுமைக் கட்சி பற்றி அவ்வப்போது பேசிக்கொண்டாலும், நேரடி அரசியல் நடவடிக்கைகள் எதிலும் இறங்கவில்லை.

புதிய அரசியல் கட்சிக்காக மணிக்கணக்காக விவாதம்

புதிய அரசியல் கட்சிக்காக மணிக்கணக்காக விவாதம்

வாஷிங்டன் டி.சி., 2004: கடந்த 2004-ஆம் ஆண்டு கோடையின்போது அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சி மாநிலப் பல்கலைக்கழகம் ஒன்றில் வருகைதரு ஆசிரியராகப் பணியாற்றினேன். வாஷிங்டன் டி.சி. நகரிலுள்ள நண்பர்களை சந்திக்கச் சென்றிருந்தபோது, சென்னையைச் சார்ந்த நண்பர் ஸ்ரீகாந்த் மீனாக்ஷி வீட்டில் ஒருநாள் இரவு பல தமிழ் நண்பர்கள் ஒன்றுகூடி தமிழக அரசியல் நிலை குறித்தும், ஒரு புதிய கட்சி துவங்க வேண்டியத் தேவை பற்றியும் மணிக்கணக்காக விவாதித்தோம்.

ஆம் ஆத்மியில் நண்பர் சோமு

ஆம் ஆத்மியில் நண்பர் சோமு

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட சென்னை நண்பர் சோமு குமார் தற்போது ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார், அந்த அனுபவம் குறித்து, விவாதத்தில் கலந்து கொண்ட, தற்போது வெர்ஜீனியா. மாநிலத்தில் வேலை செய்யும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர், நண்பர் ச. பார்த்தசாரதி, அண்மையில் எழுதியிருக்கிறார்

பாரதியின்... அக்னி

பாரதியின்... அக்னி

"எட்டு ஆண்டுகளுக்கு முன் வாசிங்டனில் இரவு முழுதும் அமர்ந்து அரசியல் விருப்பம் உள்ள தமிழக நண்பர்களை அழைத்து பேசியது உங்களுக்கு நினைவு இருக்கிறதா என்று தெரியவில்லை. முதல்நாள் இரவு ஆரம்பித்த நம் உரையாடல் மறுநாள் காலை முடிந்தது. நாங்கள் அரசியல் செய்ய நினைக்கிறோம் அரசியலில் முனைவர் பட்டம் பெற்ற நீங்கள் எங்களுக்கு ஆலோசகராக இருக்க முடியுமா என்று பேசி பாரதியின் "அக்னி" என்று கட்சியின் பெயரை முடிவு செய்ததாக நினைவு. திராவிட இயக்கங்கள், அதன் அரசியல் வெற்றிகள் குறித்து எங்களுக்கு ஆழ்ந்த கருத்துக்களை பகிர்ந்தீர்கள்."

உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்

உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்

நாகர்கோவில், 2008: தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களும், வாழ்வுரிமைகளும் பறிபோய்க் கொண்டிருப்பதால், அவற்றை மீட்டெடுக்க பசுமைக் கட்சி சித்தாந்தம் ஒன்றுதான் கைகொடுக்கும் என்ற ஆழமான எண்ணம் கொண்டவன் நான். இந்தியாவில் அப்படி ஓர் அரசியல் இயக்கம் தோன்றி வளர்ந்தோங்க வேண்டும் எனும் ஆசையோடும், அதன் தன்மைகள் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்கிற எண்ணங்களோடும் "Green Politics in India" என்கிற ஆங்கிலப் புத்தகத்தை 2008-ஆம் ஆண்டு நானே வெளியிட்டேன். அந்தப் புத்தகம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, உலகெங்குமுள்ள பல கற்றறிந்த நண்பர்களின் அறிமுகத்தை, நட்பை எனக்கு ஈட்டித் தந்தது.

தாய்பேயில் ஒரு மாநாடு

தாய்பேயில் ஒரு மாநாடு

தாய்பேய், தைவான், 2010: மேற்கண்டப் புத்தகத்தின் விளைவாக 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 முதல் மே மாதம் 2-ஆம் நாள் வரை தைவான் நாட்டுத் தலைநகர் தாய்பேய் நகரில் நடந்த ஆசிய-பசிபிக் பகுதி பசுமைக் கட்சிகளின் இரண்டாவது மாநாட்டில் (Second Congress of Asia Pacific Greens Network) இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டேன். இந்தியாவைச் சார்ந்த டாக்டர் வந்தனா சிவா, ஆஸ்திரேலிய எம்.பி. பாப் ப்ரௌன் போன்றோரும் வந்திருந்தனர்.

நீண்ட விவாதம்

நீண்ட விவாதம்

எகிப்து, நியூசிலாந்து, மங்கோலியா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தெல்லாம் பசுமைச்‌ சிந்தனை கொண்டோர் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் அணுசக்தித் திட்டங்கள் பற்றியெல்லாம் அங்கே நிறைய விவாதித்தோம்.

தெற்காசிய பசுமைப் பாசறை

தெற்காசிய பசுமைப் பாசறை

இலங்கை சார்பாகக் கலந்து கொண்ட இருவர், ஈழத் தமிழர் எதிர்ப்பாளர்களாக இருந்ததால், அவர்களைக் கடுமையாக, வெளிப்படையாக எதிர்த்துப் பேசினேன். இவர்கள் பசுமைச் சிந்தனை கொண்டோரே இல்லை என்று வாதிட்டேன். அந்த நாட்டிலிருந்து வந்திருந்த பிறரையும், பாகிஸ்தான், நேபாளம், இந்தியாவிலிருந்து வந்திருந்த நண்பர்களையும் ஒருங்கிணைத்து "தெற்காசிய பசுமைப் பாசறை (South Asian Green Forum) ஒன்றை நிறுவுவதற்கு மே 2, 2010 அன்று அந்த மாநாட்டிலேயே ஒரு கூட்டத்தை நடத்தினேன். அதன் பிறகும் நீண்ட நாட்களாக எங்களுக்குள் இந்த விவாதம் தொடர்ந்து நடந்தது.

பசுமை அரசியல் பாடங்கள்

பசுமை அரசியல் பாடங்கள்

இடிந்தகரை, 2011-2014: கடந்த 2011, 2012, 2013-ஆம் ஆண்டுகளிலும், இந்த ஆண்டும் நானும், எனது நண்பர்களும் படித்துக் கொண்டிருக்கும் பசுமை அரசியல் பாடங்களை, நடத்திக் கொண்டிருக்கும் செய்முறை பரிசோதனைகளை நீங்களும் அறிவீர்கள்தானே? அணுத்தீமை, காவிரி, மீதேன், கெய்ல், முல்லைப் பெரியாறு, லஞ்ச லாவண்யம், சுயநலவாத-சந்தர்ப்பவாத-பிழைப்புவாத அரசியல், இவை போன்ற இன்னும் ஏராளமான நோய்களுடன் தமிழன்னை அவசர சிகிச்சை மையத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

வலியால் துடிக்கும் தமிழன்னை

வலியால் துடிக்கும் தமிழன்னை

ஒரு ‘குடும்ப நல' மருத்துவர் அடுக்குமொழி மந்திரச் சொற்களால் அன்னையின் நோய் தீர்ப்பேன் என்கிறார். இன்னொரு ‘மருத்துவருக்கெல்லாம் அம்மா' மாயக் கழிம்புகள் தடவுகிறேன் போதும் என்கிறார். மற்றுமொரு ‘பரம்பரை' மருத்துவரோ பதிலின்றி பிதற்றுகிறார். அடுத்து வரும் ‘மந்திரவாத' மருத்துவரோ ‘நமோ, நமோ' என்று தன் கதையைப் பேசுகிறார். தமிழன்னை வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள், உடல் மெலிவால் துவண்டு கிடக்கிறாள், உள்ளத் தளர்வால் பரிதவித்துக் கொண்டிருக்கிறாள்.

தேவை புதிய பாதை.. புதிய மருத்துவர்கள்

தேவை புதிய பாதை.. புதிய மருத்துவர்கள்

தமிழன்னையைக் காப்பாற்ற புதிய மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள், புதிய மருந்துகள் அவசியமாகின்றன, புதிய சிகிச்சைகள் இன்றியமையாதனவாய் இருக்கின்றன. புதிய அரசியல் மருந்து....கொடுப்போம் அருகே இருந்து. வாழ்க தமிழன்னை என்று கூறியுள்ளார் உதயக்குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+