பொள்ளாச்சி மகாலிங்கம் மறைவு: கருணாநிதி, வைகோ இரங்கல்
சென்னை: தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். கொங்கு நாட்டின் பேரொளியாகத் திகழ்ந்த மாமனிதர் ஐயா பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் தாங்க முடியாத வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:
அகிம்சை, வாய்மை ஆகியவற்றின் வழி நின்று அகிலத்திற்கே வழிகாட்டிய அண்ணல் காந்தியடிக ளிடமும், "சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே அலைந்து அலைந்து வீணே அழியாதீர்" என்று சமுதாயத்தை நல்வழிப்படுத்திய வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளிடமும் நீங்காப் பற்றும்நிறைந்த பாசமும் கொண்டு ஆண்டு தோறும் அவர்களுக்காக விழாக்களை நடத்தி வந்த அருள்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மருத்துவ மனையில் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

என்னுடைய உடல் நிலை இடம் தராத தால், உடனடியாகத் தம்பி ஸ்டாலினுக்குத் தகவல் அனுப்பி, நேரில் மருத்துவ மனைக்கே சென்று அஞ்சலி செலுத்திடக் கூறினேன். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களிடம் என்னுடைய இளமைக் காலத்திலிருந்து நெருங்கிய பழக்கம் உண்டு. எல்லாக் காலங்களிலும் என் மீது மாறாத அன்பைப் பொழிந்தவர் அவர். பல நிகழ்ச்சிகளில் நானும் அவரும் கலந்து கொண்டிருக்கிறோம்.
1969ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் நாளன்று கோவை மாவட்டம் ஆப்பக் கூடலில் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் அமைத்திருந்த சாலை ஒன்றினைத் திறப்பதற்காக பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் முதலமைச்சராக இருந்த என்னை அழைத்துச் சென்றிருந்தார்.
இடிந்த மேடை
பிரமாண்டமான அளவில் கொட்டகை அமைத்து விழா நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று புயலும் மழையும் பெய்து கொட்டகையே இடிந்து விழுந்தது. மின்சாரம் இல்லை, ஒரே இருட்டு. எங்கும் பயங்கர சப்தம். மேடையில் இருந்த என்னை ஈரோடு சின்னச்சாமி அப்படியே தூக்கிக் கொண்டு வெளியில் செல்ல முயன்றார். வெளியே நின்ற கார்களைத் திருப்பி பந்தலை நோக்கி விளக்குகளைப் போட்டனர். நிகழ்ச்சிக்கு வந்த பலர் காயமடைந்தனர்.
இப்படியாகிவிட்டதே
மேடையிலிருந்த நானும், மதியழகன், சாதிக்பாட்சா, முத்துச்சாமி போன்றவர்களும் ஒவ்வொருவராக வெளியே வந்தோம். விழாவிற்கு அழைத்துச் சென்ற பொள்ளாச்சி மகாலிங்கத்தை மட்டும் காணவில்லை. நீண்ட நேரம் தேடிய பிறகு, மேடையில் இருந்த ஒரு மேஜைக்கடியில் நிலைகுலைந்து கிடந்தார். அந்த நிலையிலும் என்னிடம் வந்து "இப்படியாகி விட்டதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறிய அந்தப் பெருமகன், பொள்ளாச்சி மகாலிங்கம் தான் இப்போது என் நினைவுக்கு வருகிறார்.
பாராட்டு விழா
கொங்கு வேளாளர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்ட போது, அதனையேற்று திமுக ஆட்சிக் காலத்தில் ஆணை பிறப்பித்ததையொட்டி, பொள்ளாச்சி மகாலிங்கம் முன் நின்று ஒரு மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தியதும் மனதிலிருந்து மறையக் கூடிய நிகழ்வா?
ஆழ்ந்த இரங்கல்
எளியவர்களிடமும் மரியாதையும், பரிவும் செலுத்தி வந்த அந்த மாமனிதர் மறைந்து விட்ட செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் குறிப்பாக அவருடைய அன்பு மகன் மாணிக்கத் திற்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''

வைகோ இரங்கல் அறிக்கை
வாழ்நாள் எல்லாம் காந்திய நெறிகளைப் பரப்புவதைத் தமது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர், காந்தியார் பிறந்த நாளிலேயே மறைந்து விட்டார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு அரும்பணி ஆற்றினார். தென்னக நதிகளைப் பாதுகாக்கவும், வேளாண்மை செழிக்கவும், தொழில் வளரவும் சட்டமன்றத்தில் அரிய வாதங்களை முன்வைத்தார். தொழில் விற்பன்னராகத் தொழிற்சாலைகளைத் தந்தவர். தனது சர்க்கரை ஆலைக் கழிவினைக் கொண்டு மது தயாரித்தால் கொள்ளை இலாபம் கிடைக்கும் என்ற கூற்றினை ஏற்காமல், காந்தியவாதியாகவே வாழ்ந்தவர், தமது 60 ஆவது ஆண்டு விழாவில் காந்தியார் கருத்துகளைத் தொகுத்து 20 நூல்களை வெளியிட்டார்.
சசீலா நய்யார், பியாரிலால் ஆகியோர் காந்தியார் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார். தேசப்பற்று, தமிழ் மொழி, கல்வி, தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். எண்ணற்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்.
தமிழ் இசை இயக்கத்தைத் தனித்தன்மையோடு வளர்த்தார். அதற்காகவே ‘பஞ்ச மரபு' என்ற நூலை வெளியிட்டார். தமிழில் உள்ள தெய்வீக இலக்கியங்களான திருமந்திரம், திருவருட்பா, பெரிய புராணம் போன்ற நூல்களைத் தனது பொருட்செலவில் அச்சிட்டு மலிவு விலையில் வழங்கிய ஞான தான வள்ளல், மகாலிங்கனார், எண்ணற்ற நூல்களை எழுதி வெளியிட்டார்.
பத்மபூசண் விருது பெற்ற இப்பெருந்தகை, திருக்குறள் ஆங்கில மொழி ஆக்கம், ஒரியா, இந்தி மொழிகளிலும் அச்சிட்டு வெளியிட்டார்.
திருமந்திரத்தையும் ஆங்கிலத்தில் வெளியிடச் செய்தார். எளியவனின் இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொகுத்து உருவாக்கிய ‘தேன்மலர்கள்' எனும் நூலினை அவரது திருக்கரங்களால் வெளியிடும் பேற்றினையும் பெற்றேன்.
பொள்ளாச்சியில் அவரது இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்று, அவர் அச்சிட்ட அனைத்து நூல்களையும் அன்பளிப்பாகத் தந்து சிறப்பித்தார்.
அண்மையில் தமது 94 ஆவது பிறந்தநாளில், அருட்செல்வர் நேர்காணல்கள், எண்ணுகிறேன் எழுதுகிறேன் என்ற தமது இரண்டு நூல்களை வெளியிட்டார்.
‘ஆரவாரம் இல்லாத அமைதி; எதையும் கணக்கறிந்து செய்யும் தெளிவு; நிதானத்தோடும் விவேகத்தோடும் வகை தெரிந்து வாழும் சீலம்; பழுதுபடாத உறுதிப்பாடு; சமய இலக்கியத் திருப்பணி; ஆழ்ந்த பக்தியில் தோய்ந்த பெருமகனார் மகாலிங்கம்' என்று, நீதிபதி மகராசனால் போற்றப்பட்டவர்; தமிழ் மொழிக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் காந்திய நெறிகளுக்கும் அரணாக இருந்து போற்றத்தக்க நிறைவாழ்வு வாழ்ந்த அம்மாமனிதரின் மறைவு தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
அவரை இழந்து துயரத்தில் பரிதவிக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications