மதுவிலக்கு எதிர்ப்பு பந்த் வெற்றி .. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் வைகோ நன்றி
சென்னை: டாஸ்மாக் கடைகளை ஒழித்து, பூரண மதுவிலக்கு கோரி தமிழ்நாட்டில் இன்று நடைப்பெற்ற முழு அடைப்புப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது எனவும் ஆதரவளித்த வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
"தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 4 முழு அடைப்புப் போராட்டத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, புதிய தமிழகம், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா, தவ்ஹித் ஜமாத், தமிழ் தேசியப் பேரியக்கம், பால் முகவர்கள் சங்கம், தமிழ்ப்புலிகள் கட்சி, தற்சார்பு விவசாய சங்கம், அணுஉலைக்கான எதிர்ப்பு இயக்கம் ஆகிய பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததின் பேரில், தமிழகத்தில் வணிகப் பெருமக்கள் வருமான நட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தாங்களாகவே கடைகளை மூடி, முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்து விட்டனர்.

இது மக்கள் போராட்டத்தின் வெற்றி, பொதுநலன் கருதும் வணிகப் பெருமக்களின் வெற்றி. இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க., பா.ம.க., விக்கிரமராஜாவின் வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆளும் கட்சி காவல்துறையை ஏவிவிட்டு, நேற்று இரவில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கட்சிகளின் நிர்வாகிகளைக் கைது செய்தனர். இன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் காவல்துறையினர் ம.தி.மு.க. நிர்வாகிகளையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் தாக்கியதோடு கைது செய்தனர்.
இன்று காலை 10 மணி அளவில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ம.தி.மு.க. நகர அலுவலகத்துக்கு எதிரே ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் தில்லை செல்வம், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், நகர செயலாளர் ஜெரால்டு ஹெக்டர், காமராஜ் நற்பணி மன்ற மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அரிராமஜெயம், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சுமேஷ், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஹாஜா ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது அண்ணா தி.மு.க.வினர் நான்கு வாகனங்களில் வந்து கழக நிர்வாகிகளை மிகவும் இழிவாக பேசியதோடு, தாக்கவும் செய்தனர். சில நிமிடங்களுக்குள் அங்கு வந்த குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவல்துறையினரை ஏவி கழக நிர்வாகிகள் மீது தடியடி பிரயோகம் செய்ததோடு, கைது செய்தார்கள். தமிழகம் முழுவதிலும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் அடித்தும், உதைத்தும் காவல்துறை வாகனங்களில் ஏற்றி கைது செய்துள்ளனர்.
இது ஜெயலலிதா அரசின் பாசிச அடக்குமுறையாகும். அரசின் அடக்குமுறையை மீறி முழு அடைப்பு வெற்றி பெற்றது என்றால், முழு மதுவிலக்கு ஒன்றுதான் தமிழ்நாட்டை காக்கும் என்பதற்கான மக்களின் பிரகடனம்தான் போராட்டத்தின் வெற்றி. டாஸ்மாக் மதுக்கடைகள், ஒயின்ஷாப்புகளின் மது நச்சு வெள்ளமாகப் பாய்ந்து தமிழ்நாட்டை நாசம் செய்கிறது.
இளம் தலைமுறையினர் மது அருந்துவதும், தமிழ்நாட்டின் தொன்மைப் பண்பாட்டுக்கு அடையாளமாக உள்ள தாய்க்குலத்தின் சில பெண்கள்கூடக் குடிப்பழகக்கத்துக்கு ஆளாகும் நிலை நம் நெஞ்சைப் பிளக்கிறது. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகமே கொந்தளிக்கிறது. கோடானுகோடித் தாய்மார்கள் மதுக்கடைகளை ஒழிக்க வீறுகொண்டு எழும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டுக்கு ஏற்பட இருக்கும் அழிவைத் தடுக்கவே வீரத் தியாகி சசிபெருமாள் உயிர்ப்பலியானார். அவரைச் சாகடித்தது மட்டும் அல்லாமல், கடுகு அளவும் ஈவு இரக்கம் இல்லாமல் சசிபெருமாளின் மகனையும், மகளையும் கைது செய்தது ஜெயலலிதா அரசு .
நேற்று ஆகஸ்டு 3 ஆம் தேதி, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவிகள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற முயன்றபோது, காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். தரையில் விழுந்து கிடந்த கல்லூரி மாணவர்களை ஒரு காவல்துறை அதிகாரி பூட்ஸ் காலால் உதைப்பதைத் தொலைக்காட்சியில் கண்ட அனைவரின் நெஞ்சமும் கொதித்தது.
இனி மாணவர் புரட்சி காட்டுத் தீயாகப் பரவும். தமிழகத்தின் தாய்மார்கள் வெகுண்டு எழுந்து வீதிக்கு வருவார்கள். கொள்ளையடித்த ஊழல் பணத்தாலும், இலவசங்களாலும் இனி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, வழிபாட்டுத் தலங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள், மது பார்களை மூடப்போவதாகவும், மது விற்பனை நேரத்தை குறைக்கப் போவதாகவும் தமிழக மக்களை குறிப்பாக தாய்மார்களை ஏமாற்றுவதற்காக ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தயாரித்துள்ளார். அதனை அறிவிக்க உள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு அருகில் மதுக்கடைகள் கூடாது என்று ஏற்கனவே நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன்படி ஜெயலலிதா அரசு செயல்பட்டதா? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதா? இல்லை. மதுக்கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைப்பது என்பது பொதுமக்களை ஏமாற்றவும், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நேரங்களில் அவற்றைக் குடிகாரர்களிடம் அதிக விலைக்கு விற்று ஆளும் கட்சி கொள்ளையடிப்பதற்கும்தான் இந்த எற்பாடு.
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா தந்திரமாக அறிவிக்கப் போகும் ஏமாற்று நடவடிக்கைகளை நம்பி மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. அனைத்து மதுக்கடைகளும் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். நான் வணங்கும் தாய்மார்களே, டாஸ்மாக் கடைகளை அகற்ற வீறுகொண்டு போராடுங்கள்! எனது அன்பு மாணவக் கண்மணிகளே உங்கள் வாழ்வையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் நாசமாக்கும் டாஸ்மாக் கடைகளை, ஒயின்ஷாப்களை அடியோடு அகற்ற போர்க்கோலம் பூணுங்கள். வெள்ளையனே வெளியேறு; இந்திய மக்களே, மாணவர்களே வீதிக்கு வாருங்கள்; செய் அல்லது செத்து மடி என்று1942 ஆகஸ்டு 8 இல் மகாத்மா காந்தி அறப்போர்ப் பிரகடனம் செய்தார்.
மாணவச் செல்வங்களே போர்க்கோலம் பூணுங்கள்! அடக்குமுறையை எதிர்கொள்வோம்! தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்போம் எனப் புறப்படுங்கள். மதுவை ஒழிக்கத் தாய்மார்களாலும், மாணவர்களாலும் மட்டுமே முடியும். எங்களைப் போன்ற அரசியல் கட்சிகளால் முடியாது. எனவே, தமிழ்நாட்டைக் காப்பாற்றத் தாய்மார்களும், மாணவ மணிகளும் களங்கள் அமைக்க தமிழ்நாட்டின் சாமான்ய ஊழியன் என்ற முறையில் இருகரம் கூப்பி அன்புடன் வேண்டுகிறேன்.
முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தந்த அரசியல் கட்சிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், மனித உரிமைகள் அமைப்புகளுக்கும், கடைகளை மூடிய வணிகப் பெருமக்களுக்கும் ஆதரவு தந்த மாணவச் செல்வங்களுக்கும், பொதுமக்களுக்கும், போராட்ட அழைப்பு விடுத்த அரசியல் இயக்கங்களின் சார்பில் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் வைகோ.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications