வைரமுத்து மன்னிப்பு கேட்கனும்.. உண்ணாவிரதம் துவங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்.. பக்தர்கள் குவிந்தனர்
மதுரை: ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உண்ணாவிரதம் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். பன்னிரெண்டு ஆள்வார்களில் ஒருவர் ஆண்டாள். பக்தையான அவர் எழுதிய திருப்பாவை பிரசிதிப்பெற்றது. சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வைரமுத்து தெரிவித்ததால் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
அவர் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளன.

போராட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இந்து அமைப்புகள் பெரும் போராட்டம் நடத்தியிருந்தன. இதில் திரைப்பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர். இந்த நிலையில் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வலியுறுத்தியதோடு, அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

உண்ணாவிரதம் ஆரம்பம்
வைரமுத்து, இன்னும் கோயிலுக்கு சென்று மன்னிப்பு கேட்கவில்லை என்பதால், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், ஆண்டாள் கோயிலுக்கு எதிரில் இன்று காலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஆண்டாள் தாயை தப்பாக பேசியவர்கள் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும் என அவர் அப்போது தெரிவித்தார்.

கோரிக்கையை ஏற்கவில்லை
மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், இவரின் உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர். இருப்பினும், சடகோப ராமானுஜம் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்.

பக்தர்கள் குவிகிறார்கள்
சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து, சுற்றுவட்டாரத்திலுள்ள பக்தர்கள் கோயிலுக்கு திரண்டவண்ணம் உள்ளனர். ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்தபடி உள்ளனர். ஜீயர் உண்ணாவிரதத்தை தொடருவதால் பக்தர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
