காவிரி வாரியத்துக்காக தமிழக ஆளுநரை ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பதால் என்ன பயன்- வேல்முருகன் கேள்வி
காவிரி வாரியத்துக்காக தமிழக ஆளுநரை முதல்வரும், துணை முதல்வரும் சந்திப்பதால் என்ன பயன் இருக்கிறது என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காவிரி வாரியத்துக்காக தமிழக ஆளுநரை முதல்வரும், துணை முதல்வரும் சந்திப்பதால் என்ன பயன் இருக்கிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் தனது அறிக்கையில் கூறுகையில், அத்துமீறல்கள் மற்றும் பாலியல் குற்றசாட்டு புகாருக்கு ஆளாகி, தமிழக மக்கள் திரும்பப்பெறச்சொல்லும் ஆளுநரிடமே தஞ்சமடையும் அதிமுக அரசு!தமிழகத்துக்கு எதிரான சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கென்றே அனுப்பப்பட்டவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்வதென்றால் அதற்கு என்ன பொருள்?
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவர் பதவிப் பிரமாணம் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் போராட்டம்
விழா முடிந்ததும், தர்பார் மண்டபத்துக்கு பின்புறமுள்ள அறையில் ஆளுநரை ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் சந்தித்துப் பேசினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் போராட்டம் பெரிதாகி, வலுவாகி வருவதை சமாளிக்க ஆளுநருடன் கலந்து ஆலோசிக்கவே இந்த சந்திப்பு என்று தெரிகிறது. ஆனால் இந்த சந்திப்பு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட செய்தி வேறு.

நீர் ஒழுங்காற்று குழு
அதாவது மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு மே 3ந் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும் நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு ஆளுநர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று இருவரும் அவரைக் கேட்டுக்கொண்டதாக செய்தி தெரிவிக்கப்பட்டது.

கால அவகாசம்
நாம் கேட்பதெல்லாம், இந்த சந்திப்புக்கு இப்போது அவசியம் என்ன என்பதுதான்.
உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு, மே 3ந் தேதிக்குள் வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யுமாறு அதே உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருப்பதே நீதிக்குப் புறம்பான செயல்தான்.
இந்த அவகாசத்தைக் கொடுக்காமல், 'மறுபேச்சின்றி உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்'என்றுதான் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்க வேண்டும்.

மத்திய அரசை ஆளுநர் வலியுறுத்த வேண்டும்
இந்த நிலையில், மே 3ந் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது; அது தொடர்பாக ஆளுநரைப் பார்த்து ஆலோசனை நடத்துவதென்பதும் மேலாண்மை வாரியம் மற்றும் நீர் ஒழுங்காற்று குழு அமைக்குமாறு மத்திய அரசை ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதென்பதும் வேண்டாத வேலை.

என்ன பொருள்
ஏற்கனவே மாவட்டங்கள் தோறும் ஆய்வு, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் என அத்துமீறல்கள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு புகாருக்கு ஆளாகி, தமிழக மக்கள் திரும்பப்பெறச்சொல்லும் ஆளுநரிடமே சென்று ஆலோசனை கேட்பதென்றால் அது அவரிடம் இந்த அரசு தஞ்சமடைவதாகத்தான் பொருள்.
அதனால்தான் தமிழகத்துக்கு எதிரான சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கென்றே அனுப்பப்பட்டவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்வதென்றால் அதற்கு என்ன பொருள் என்று கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! கேள்வி!












Click it and Unblock the Notifications