"குமாரசாமி" ரூபத்தில் வந்து அதிமுகவினரின் வேண்டுதலை நிறைவேற்றிய தமிழகத்து "சாமிகள்"!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் வழக்கில் வெல்ல வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மேற்கொண்ட பூஜைகள், வழிபாடுகள், பாதயாத்திரைகள், பால்குட நிகழ்வுகள் உச்சத்தை எட்டியிருந்தன. இந்த வேண்டுதல்களுக்கு இன்றோடு முடிவு வந்தது.
கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அத்தனை பெரிய கோவில்களிலும் அதிமுகவினர் மயமாக நேற்று மாறிப் போயிருந்தது. இன்று தீர்ப்பு வெளியான நிலையில் அதிமுகவினரின் பூஜைகளும் உச்சத்தை தொட்டிருந்தன.
விதம் விதமான பூஜைகள், கோரிக்கைகளுடன் கோவில்களை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கோவில்கள் அனைத்தும் கிட்டத்த அதிமுகவினரின் கஸ்டடிக்கு வந்தது போன்ற தோற்றம் காணப்பட்டது.

ஊளையிடட்டும் சிறு நரிகள்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் நேற்று ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில், அம்மா அரியணை ஏறும் நாள் வந்து விட்டது. நாளைய தீர்ப்பு அம்மாவுக்கு வெற்றி தேடித் தரும். அதுவரை சிறு நரிகள் ஊளையிட்டுக் கொள்ளட்டும் என்று கூறப்பட்டிருந்தது.

திருவாரூரில் பால் குட ஊர்வலம்
திருவாரூரில் 6000க்கும் மேற்பட்ட அதிமுக மகளிர் பால்குடங்களுடன் ஊர்வலமாக தியாகராஜ சாமி கோவிலுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பழனியில் பாதயாத்திரை
பழனி அருள்மிக தண்டாயுதபாணி திருக்கோவிலில் 1006 பேர் கலந்து கொண்ட தீர்த்தப் பானை ஊர்வலம் நடைபெற்றது. இதனால் பழனியே நேற்று அல்லோகல்லப்பட்டுப் போனது.

திருவண்ணாமலையில்
திருவண்ணாமலை மாவட்டம் ராட்டினமங்கலம் கிராமத்தில், 507 பெண்கள் பால் குட ஊர்லவம் நடத்தினர். இந்த ஊர்வலம் கங்கையம்மன் கோவிலில் முடிவடைந்தது.

கரூர்
கரூரில் உள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகா யாகம் நடந்தது. மேலும் 1 லட்சத்து 8 விளக்குகளை அம்மா என்ற எழுத்துக்களில் ஏற்றி வழிபட்டு கோவிலையே அல்லோகல்லப்படுத்தி விட்டனர் அதிமுகவினர்.

மதுரையில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாமகா முனீஸ்வரர் கோவில் கருவறை முன்பு 1008 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

அன்னதானம்
இதுதவிர அன்னதானம், சத்ரு சம்ஹார யாகம் என விதம் விதமான வழிபாடுகளும் பூஜைகளும் கோவில்களில் களை கட்டியிருந்தன. ஆயிரக்கணக்கான அதிமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.

நல்ல தீர்ப்பு சொன்ன குமாரசாமி
இத்தனை சாமிகளிடம் அதிமுகவினர் வேண்டிக் கொண்டுள்ள நிலையில்.. இன்று நீதிபதி குமாரசாமி சொல்லப் போவதுதான் ஜெயலலிதாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமையும் என்பதால் குமாரசாமி நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும் என்ற வேண்டுதலும் அதிமுகவினரிடம் நிறையவே காணப்பட்டது. கடைசியில் அவர்களுக்கு சந்தோஷம் தரும் தீர்ப்பே வெளியாகி விட்டது.











Click it and Unblock the Notifications