விஜய் ராம்ப் வாக் வேற லெவல்.. தயார் நிலையில் 1000 பவுன்சர்கள்..விஜய் உற்சாக கடிதம்
விக்கிரவாண்டி: வி.சாலையில் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க உள்ள விஜய்யின் பாதுகாப்புக்காக 1000 பவுன்சர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை அப்பணியில் ஈடுபட்டுள்ள பவுன்சர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பல கட்ட சர்ச்சைகளை கடந்து நாளை மறுநாள் விக்கிரவாண்டி விசாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கைத் திருவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. சுமார் 4 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்த மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணிகளை விஜய் சிசிடிவி கேமிரா மூலம் பார்த்து வந்ததாக ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மாநாடு பற்றி தவெக தலைவர் விஜய் இன்று தனது தொண்டர்களுக்கு மூன்றாவது கடிதம் எழுதி இருக்கிறார். அதில் "உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலை திறந்து வைத்துக் காத்திருப்பேன். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மாநாட்டில் கலந்து கொள்ளும் விஜய்யின் பாதுகாப்புக்காக சுமார் 1000 பவுன்சர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர் என்ற தகவலை பவுன்சர் சந்தோஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் தரப்பிலிருந்து 250 பவுன்சர்கள் வேலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து பவுன்சர் சந்தோஷ், "இந்த மாநாட்டுக்கு பொதுவாக இவ்வளவு பேர் வருவார்கள் எனக் கணித்திருக்கிறார்கள். ஆனால், அதைவிட 10 மடங்கு கூட்டம் வரலாம். ஆகவே, விஜய்க்குப் பாதுகாப்பு அதிகம் தேவை. வருகின்ற அனைவரும் ரசிகர்கள். ஆர்வத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வார்கள்.
வழக்கமாக அவர் மாநாட்டு மேடையில் மட்டும் உட்கார்ந்து இருக்கப் போவதில்லை. ராம்ப் வாக் வேறு வைத்திருக்கிறார்கள். அவர் நடந்து போகும் வழிநெடுக பாதுகாப்புக்கு பவுன்சர்கள் தேவை எப்படியும் 500 பவுன்சர்களை நிறுத்த உள்ளனர். ஒட்டுமொத்தமாக 1000 பேர் தேவைப்படும் என்றார்கள். எங்கள் தரப்பிலிருந்து 250 பேரை அனுப்ப இருக்கிறோம். விஜய் அருகில் மட்டும் ஒரு 5 முதல் 10 பவுன்சர்கள் நிறுத்தப்படுவார்கள். அவர் ராம்ப் வாக் வரும் மேடை அருகே 5 அடிக்கு ஒரு பவுன்சர் இரண்டு பக்கங்களிலும் நிறுத்தப்பட உள்ளனர். அதைத் தாண்டி அங்கே இரண்டு பக்கமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டும் உள்ளது. அதைத்தாண்டி ஒருசிலர் எகிறிக் குதிக்கலாம். அதற்குத்தான் இந்த முன் ஏற்பாடு.

இந்த ராம்ப் வாக் என்பது நல்ல கான்செப்ட்தான். இங்கே வருபவர்கள் பலரும் விஜய்யை அருகில் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் வருகிறார்கள். பல மையில் தூரம் பயணித்து வரும் அவர்கள் விஜய்யை மேடையில் மட்டுமே பார்த்துவிட்டால் திருப்தியாக இருக்காது. அதை உணர்ந்துதான் இதைச் செய்துள்ளனர். மொத்தம் இதன் தூரம் 17 மீட்டர். அதில் விஜய் நடந்தே வரப் போகிறாரா? அல்லது அதில் ஏதாவது பேட்டரி கார் போல் ஏதாவது ஏற்பாடு செய்வார்களா என்றும் தெரியவில்லை. அதற்கும் வாய்ப்பு உள்ளது " என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "வரும் பவுன்சர்கள் அனைவரையும் எடுத்துவிட மாட்டார்கள். அதிலும் ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் பக்கமும் ஆர்வக்கோளாறு இருக்கலாம். எனவே பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறார்கள். வரும் கூட்டத்தை தனித்தனியாக வகுத்துள்ளனர். கட்சித் தொண்டர்கள் அவர்களுக்கு என்று தனி பாஸ். அதைவிட சில்வர், கோல்டு, பிளாட்டினம், பிரிமியம் என மூன்று தரத்தில் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவகையான பாஸ் வழங்கப்பட்டுள்ளதோ அதற்கான இடத்தில்தான் அமர முடியும். இது மாநாடு போல் தெரிந்தாலும், இது ஒரு செலிபிரேட்டி நிகழ்ச்சிபோல்தான் நடக்கும்.


Click it and Unblock the Notifications
