ரஜினி அரசியல் பிரவேசத்தால் விஜயகாந்த் 'ஷாக்'- செல்வாக்கு 'அம்போவா? சர்வே எடுக்கும் பிரேமலதா!
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரொம்பவே அதிர்ச்சியடைந்து போயுள்ளாராம். ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் பாதிப்பு வருமான என சர்வே எடுக்கிறது தேமுதிக.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தால் ரொம்பவே அதிர்ந்து போயுள்ளாராம் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் விஜயகாந்துக்கு இருக்கும் செல்வாக்கில் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ரகசிய சர்வே எடுக்க உத்தரவிட்டுள்ளாராம் பிரேமலதா.
விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கிய போது திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக விஸ்வரூபமெடுத்தார். ஆனால் அந்த செல்வாக்கு இப்போது அடியோடு இல்லை.

தேமுதிக நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலும் திமுகவிலுமாக ஐக்கியமாகிவிட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைத்தான் சந்தித்தது.
இந்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து இன்னமும் தேமுதிக மீளவே இல்லை. இதனால் தேமுதிகவின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் திடீர் அரசியல் பிரவேசத்தால் ரொம்பவே அதிர்ந்து போயுள்ளாராம் விஜயகாந்த். இதனால்தான் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினிகாந்த் பற்றி அதிகம் கேட்காதீர்கள் என வழக்கம் போல நாக்கை துறுத்தினார் விஜயகாந்த்.
தற்போது ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் விஜயகாந்துக்கு இருக்கும் கொஞ்சம் செல்வாக்கும் காணாமல் போய்விடுமோ என அஞ்சுகிறாராம் பிரேமலதா. இதனால் தேமுதிக நிர்வாகிகளை அழைத்து தொடர்ந்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
ரஜினி கட்சியை தொடங்கினால் நமக்கு என்ன மாதிரி பாதிப்பு வரும் என விளக்கமாக ஒரு அறிக்கையாக தர தேமுதிக நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சர்வே ஏஜென்சிகளை அழைத்தும் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம், இதனால் விஜயகாந்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒரு சர்வே எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளாராம் பிரேமலதா.
இதை அலட்சியமாக நினைக்காமல் தேமுதிகவின் எதிர்காலம் என நினைத்து செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறாராம் பிரேமலதா. ரஜினிகாந்தின் அரசியல் வருகை தேமுதிகவை ரொம்பவே பாதித்துவிட்டது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications