1 கோடி தென்னை மரம்.. அதை நம்பி 30 லட்சம் பேர்.. தென்னையில் சிலந்தி கடிக்குது.. விஜயகாந்த் பேச்சு!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரனை ஆதரித்துப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், விவசாயிகளின் பிரச்சினை குறித்தும், நீர்ப்பாசனத் திட்டங்கள், மின்வெட்டு குறித்தும் பேசி பிரசாரம் செய்தார்.

தாராபுரம் சாலை, தாஜ் திடலில் அவர் பேசியதாவது...
உடுமலை பகுதியில் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. இதை நம்பி 30 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். தென்னையில் சிலந்தி பூச்சி தாக்குகிறது. சிலந்தி பூச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் அமராவதி அணை, திருமூர்த்தி அணைகள் தூர்வாரப்படவில்லை. மொத்த பணத்தை வாரி விட்டார்கள். நமது கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணியில் யார்? யார்? உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
ஜெயலலிதா ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று பேசியுள்ளார். இதை அவர் எத்தனை தடவைதான் சொல்வார்.
எம்.ஜி.ஆர்.முதல்-அமைச்சராக இருந்த போது அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை ஆரம்பித்தார். அதை ஜெயலலிதாவும், கருணாநிதியும் கிடப்பில் போட்டு விட்டனர். பாண்டியாறு-புன்னம் புழா திட்டத்தை நிறைவேற்றுவோம் என்கிறார்கள். இந்த 3 திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என்கிறார்கள். இதை எத்தனை தடவைதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 3 தடவை சொல்லி விட்டீர்கள்.
ஜெயலலிதா கூட்டங்களில் பேசும் போது, செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்கிறார். அதற்கு மக்கள் வேலை கொடுப்பீர்களா, மின்சாரம் கொடுப்பீர்களா, தண்ணீர் கொடுப்பீர்களா? என்று கேட்கிறார்கள்.
தொடர் மின்வெட்டு காரணமாக கொங்கு மண்டலத்தில் வாழ்வாதாரமான விசைத்தறி தொழில் முடங்கி விட்டது. மின்சாரம் இல்லாததால் இங்கு தொழில் நசிந்து விட்டது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாந்தரையாக இருந்த குஜராத்தில் பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கியவர் மோடி. இங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போகிற இடங்களில் எல்லாம் மக்கள் குடிதண்ணீர் கேட்கின்றனர்.
வருகிற 13-ந்தேதி பங்குனி உத்திரம் வருகிறது. ஜெயலலிதா பக்கத்து ஊருக்கு வருகிறார். அதற்கு கூட்டத்தை சேர்க்க தனியார் பஸ்களை எல்லாம் கொண்டு செல்வார்கள்.
அதிமுகவினர் கட்சிக் கொடி கட்டி கொண்டு சென்றால் கேட்பதில்லை. ஆனால் நாம் கட்சிக் கொடி கட்டிக் கொண்டு சென்றால் தேர்தல் அதிகாரிகள் பிடித்து கொள்கிறார்கள்.
பழனிக்கு பங்குனி உத்திரத்திற்கு செல்கிறவர்கள் செல்லுங்கள். மோடி பிரதமராக வேண்டும். மதவாதம் என்று கூறி சிலர் மக்களை ஏமாற்றுகிறார்கள். வாஜ்பாய் தான் அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கினார். ஒரு விழாவில் அப்துல்கலாமை குத்து விளக்கேற்ற சொன்னார்கள். அப்போது அவர் சொன்னார். இது தான் இந்தியா என்று. அதற்கு காரணம் குத்துவிளக்கு இந்துக்கள் பயன்படுகிறது என்பதால் என்று பேசினார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications