செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து உரிய விளக்கம் தராததால் ஜன. 5-ல் போராட்டம்: கருணாநிதி
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு தொடர்பாக நீதி விசாரணை கோரியும் உரிய விளக்கம் தரப்படாததால் தான் வரும் ஜனவரி 5-ந் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
23-12-2015 அன்று தி.மு.கழக அலுவலகத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டிசம்பர் திங்கள் தொடக்கத்தில் தமிழகத்திலே நடந்து விட்ட வெள்ள நாசங்களுக்கும், இழப்புகளுக்கும் - இங்கே ஆட்சியை நடத்தும் அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 5-1-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் சென்னை மாநகரில் என்னுடைய தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என்று நமது மாவட்டக் கழகச் செயலாளர், மா. சுப்பிரமணியம் காவல் துறையிடம் அனுமதி கோரிய போது, சென்னை மாவட்டத்தில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஒரு இடத்திலே தான் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி உண்டு என்று தெரிவித்ததன் பேரில், தற்போது சென்னை, சேப்பாக்கம் அரசினர் விடுதி அருகில் ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இடத்திலே ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதிலும், ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களான சென்னை தெற்கு மாவட்டம், மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் சார்பில் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், திருவள்ளூர் தெற்கு, வடக்கு மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களிலிருந்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளும், பொதுமக்களும் வந்து கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

பெய்த மழை அளவு
2016ஆம் ஆண்டு, கழகத்தைப் பொறுத்த வரை கண்டன ஆர்ப்பாட்டத்துடன்தான் தொடங்குகிறது. எதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம்? 100 ஆண்டுகளில் சென்னை சந்தித்திராத மழை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நவம்பர் 9ஆம் தேதி 13.6 செ.மீ. மழை - நவம்பர் 13, 16, 23 ஆகிய தேதிகளிலும் மழை கொட்டியது. நவம்பர் 16ஆம் தேதி அதிகப்பட்சமாக 24.6 செ.மீ. மழை பெய்தது. 23ஆம் தேதி 14 செ.மீ. மழை.

இந்த கேள்விகளுக்கு பதில் என்ன?
நவம்பர் இறுதியில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக 20 செ.மீ. மழை. நவம்பர் மாதத்தில் மட்டும் 119.73 செ.மீ. என்ற அளவுக்கு மழை. வெள்ளத்தினால் விளைந்த விபரீதங்கள் என்ன? சொல்ல வேண்டியது யார்? அரசு அல்லவா? எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை வீடுகள் அழிந்தன? எத்தனை தொழில்கள் நாசமாகின? எவ்வளவு ரூபாய் இழப்பு? ஏதாவது பட்டியல் அரசினால் தரப்பட்டதா? வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட முதலமைச்சர் சென்ற இடங்கள் எத்தனை? எந்தெந்த பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்றார்? முதலமைச்சரால் எத்தனை அறிக்கைகள் தரப்பட்டன? முதலமைச்சர் எத்தனை முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்? ஏதாவது விவரம் தரப் பட்டதா?

வாஸ்ட் அப்
ஒரே ஒரு முறை - "வாட்ஸ்-அப்" மூலமாக ஜெயலலிதா உரையாற்றியிருக்கிறார். அதிலும் முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் ஆறுதல் உரை வழங்கியிருக்கிறார். வீட்டிலே தொலைபேசி மணி அடித்து அதை எடுத்தால் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றும் உரைதான்! அது உண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது தானா? அல்லது அவருடைய குரலில் வேறு யாராவது பேசுகிறார்களா? அந்தப் பேச்சில் பாதிக்கப்பட்ட மக்களையெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும், தான் அவர்களையெல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என்றும் உறுதிமொழி கூறினாரே? என்ன செய்தார்?

வாக்காளப் பெருமக்களே..
ஒரே ஒரு நாள் தொகுதி மக்களைப் பார்த்து ஆறுதல் கூறப் போனார்; அப்போதுகூட பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து தமிழ்நாட்டு மக்களே, ரத்தத்தின் ரத்தங்களே என்றெல்லாம்கூட விளிக்கவில்லை. மாறாக அப்போதும் தேர்தல் கண்ணோட்டம்தான்; "வாக்காளப் பெருமக்களே" என்று தான் ஒவ்வொரு கூட்டத்திலும் அழைத்தார். ஏடுகள் எல்லாம் அதைப் பெரிதாக வெளியிட்டிருந்தன. அது பற்றி ஏதாவது விளக்கம் அளித்தாரா? ஒன்றும் கிடையாது!

ஸ்டிக்கர் விவகாரம்
அ.தி.மு.க. தொண்டர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணப் பொருள்களிலேகூட "அம்மா"வின் உருவப்பட ஸ்டிக்கர்களைப் பிடிவாதமாக ஒட்டு வதிலேதான் அக்கறை காட்டினார்கள். என்னுடைய செயலாளர் ஒருவரின் வீட்டில் கீழ்ப் பகுதி முழுவதும் நீர் புகுந்து மாடியில் சென்று தங்க முயற்சி செய்து கீழே இறங்கவும் முடியாமல், சாப்பாட்டிற்கும் ஒன்றும் கிடைக்காமல், பின்னர் நான் என்னுடைய பாதுகாவலர் ஒருவரை அனுப்பி, அவரையும், அவரது மனைவியையும் காப்பாற்றி, தொடர்ந்து நான்கைந்து நாட்கள் ஓட்டலில் தங்கி யிருந்தார். என்னுடைய மருத்துவர் ஒருவர், வீட்டிலிருந்து தப்பி சென்னைக்கு அப்பால் அவருடைய நண்பர் இல்லத்தில் சென்று நான்கைந்து நாட்கள் தங்கியிருக்கிறார்.

அறிவாலய நண்பர்கள்...
அறிவாலயத்தில் பணியாற்றும் பல நண்பர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்து ஒவ்வொரு வருக்கும் தனிப்பட்ட முறையில் பல ஆயிரம் ரூபாய் இழப்பு. என்னுடைய பாதுகாவலர்கள் பலரே பல குடியிருப்புகளுக்குச் சென்று உயிருக்குத் தவித்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றிய விவரத்தை எல்லாம் என்னிடம் நேரில் வந்து கூறினார்கள். மிகவும் சிரமப்பட்டு கார் வாங்கியவர்கள், நீருக்குள் கார் மூழ்கி விட்ட காரணத்தால், என்னதான் இன்சூரன்ஸ் செய்திருந்த போதிலும், தற்போது என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கொடுமையை எதிர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், குறிப்பாக இளைஞர்களும் ஆற்றிய அளப்பரிய பணிகளுக்கு நாமனைவரும் தலைவணங்க வேண்டும். தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் உழைத்தார்கள்.

வராத ஜெ.
ஆனால் தேர்தல் நேரத்தில் "செய்வீர்களா? செய்வீர்களா?" என்று கேட்டு வாக்குகளைப் பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை. குறிப்பாக "ஜெயா" தொலைக்காட்சி அலுவலகத்தைக் காப்பாற்ற தண்ணீர் உள்ளே வராமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்ததோடு, வாசலிலேயே ஒரு தீயணைப்பு வாகனமும் தயாராக நின்றது. ஆனால் எங்கள் வீட்டு வாசலிலேயே தண்ணீர் நிரம்பி, கார் வரை சூழ்ந்த நிலையில் பகுதிக் கழகச் செயலாளர் இயந்திரத்தின் உதவியால் தண்ணீரை அப்புறப்படுத்தியிருக்கிறார்.
ஒரு சில நாட்கள் ஏடுகளே வெளிவர முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து வெளிவந்த பத்திரிகைகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் பட்ட பாடுகள் எல்லாம் வெளிவந்தன. குழந்தை குட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கி வருவதைப் போல சாலைகளில் வந்த காட்சிகள்!

செம்பரம்பாக்கம் திறப்பே காரணம்
இவ்வளவு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் யார் காரணம்? இயற்கை மட்டுமா காரணம்? செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க உரிய நேரத்தில் அரசினர் அனுமதி அளித்திருந்தால், டிசம்பர் 1ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நேரத்தில் ஏராளமான நீரைத் திறந்து சென்னையை மூழ்கடித்திருக்க வேண்டிய சிரமம் நேர்ந்திருக்காது அல்லவா? சென்னை வாழ் மக்கள் எல்லாம் இவ்வாறு அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய நேரத்தில், அவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட முன் வராவிட்டாலும் முதல் அமைச்சர் என்ன செய்கிறார்?

அமைச்சர்களின் பதாகைகள்
தலைமைச் செயலகத்திற்கு வந்து பணக்காரர் களிடமும், தொழிலதிபர்களிடமும் நிவாரண நிதித் தொகையை வாங்குகிறார் - காணொலி காட்சி மூலமாக எதையாவது திறந்து வைத்து புகைப்படங்களை ஏடுகளில் வரச் செய்கிறார். அவ்வாறு அவர் வருவதற்கே எத்தனை ஏற்பாடுகள்? தயவுசெய்து சென்னையிலே உள்ள மக்கள் அவர் வரும் வழியிலே உள்ள தெருவுக்கு வந்து பாருங்கள்! எத்தனையெத் தனை வரவேற்பு பதாகைகள் தெரியுமா? இதோ, இன்று கட்டப்பட்டுள்ள "ப்ளக்ஸ் போர்டுகள்" - அதிலே உள்ள வார்த்தைகளில் சிறு குறிப்பை மட்டும் பாருங்கள்!
"கருணையின் பிறப்பிடமே" என்ற தலைப்பில் ஒரு பெரிய போர்டு - வைத்திருப்பவர் யார் தெரியுமா? வருவாய்த் துறை அமைச்சர்!
"கருணைக் கடலே" என்ற தலைப்பில் ஒரு பெரிய போர்டு - உபயம் - அமைச்சர் வேலுமணி!
"வள்ளலின் வாரிசே" என்ற தலைப்பில் ஒரு போர்டு - அதுவும் அமைச்சர் வேலுமணிதான்!

சென்னை மேயரின் பதாகை
"ஏழைகளின் ஒளி விளக்கே" என்ற தலைப் பிலான தட்டியை வைத்திருப்பவர் அமைச்சர் தங்கமணி!
"கழகத்தின் காவல் தெய்வமே" - "எங்கள் உயிர் மூச்சே" என்ற தட்டிகளை வைத்திருப்பவர் அமைச்சர் வைத்தியலிங்கம்!
"வெற்றியின் விலாசமே" என்ற தலைப்பிலும் - "எங்கள் குல சாமியே" என்ற தலைப்பிலும் - "அறிவுத்திறமே ஆற்றல் கரமே" என்ற தலைப்பிலும், "விவசாயிகளின் விடிவெள்ளியே" என்றும் "ஏழை களின் ஏந்தலே" என்றும் "அற்புத வரமே" என்றும், "விடியல் தந்த வெற்றித் திருமகளே" என்றும், "ஈகையின் பிறப்பிடமே" என்றும், "பசுமைக்கு வித்திட்ட எங்கள் பாசத் தாயே" என்றும், "வாகையின் வசிப்பிடமே" என்றும், "காவிரித் தாயே" என்றும், அமைச்சர்கள் வரிசையாக, மக்கள் நடந்து செல்வதற்குக் கூட வழியில்லாமல் தட்டிகளை வைத்திருப்பதை யார் வேண்டுமென்றாலும் சென்று இன்றும் காணலாம்.
சென்னை மாநகர மேயர் என்ன போர்டு வைத்திருக்கிறார் தெரியுமா? "உண்மையின் உயிர் மூச்சே! உலகெங்கும் உங்கள் மூச்சே! மாநகராட்சியின் ஊக்கமே! உயிரே" என்ற நீண்ட தலைப்பில் மிகப் பெரிய விளம்பர போர்டு வைத்திருக்கிறார். தவறு அதிகமாகச் செய்தவர் அல்லவா? அதனால் பெரிய போர்டு!

மறைக்கப்படும் மரணக் கணக்கு
மக்கள் எல்லாம் பிழைப்பு போய் விட்டதே என்று கதறுகின்ற நிலையில், முதல் அமைச்சர் வீட்டு வாசலில் இத்தனை வரவேற்புத் தட்டிகள்! அவருடைய வீட்டு வாசலிலே மட்டும் அலங்கார வளைவுகள் அல்ல. அவர் சென்னையிலே தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு திருப்பூரில் ஒரு பள்ளமான பகுதியிலே கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்திருக்கிறார். ஆனால் திருப்பூர் நகரிலே இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜெயலலிதாவின் உருவப் படங்கள் தாங்கிய பிளக்ஸ் போர்டுகள்! ஆனால் இதேநேரத்தில் இந்த ஆட்சியினரின் உண்மை உருவத்தைப் பற்றி பல வார ஏடுகள் விரிவாகவே எழுதி வருகின்றன. இதோ; "நக்கீரன்" இந்த வார இதழில், "மறைக்கப்படும் மரணக் கணக்கு" என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் சில பகுதிகள்!

தவறான புள்ளி விவரம்
"தமிழக மக்களின் மனதில் மறக்க முடியாத ஆழமான வடுக்களை ஏற்படுத்திய மழை வெள்ளத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை தமிழக அரசு மறைத்து தவறான புள்ளி விவரங்களைச் சொல்கிறது என்கிற குரல் மாநில முழுவதும் எதிரொலிக்கிறது. வெள்ளத்தால் தமிழகம் எவ்வளவு பாதிக்கப்பட்டது என்கிற கணக்கு முழுமையாக திரட்டப்படுவதற்கு முன்பே வெள்ள நிவாரணம் 26 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என ஜெ. மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பது தமிழக அரசு வெள்ள நிவாரணப் பணிகளில் வெளிப்படைத் தன்மையாகச் செயல்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்கிறார்கள் இயற்கைப் பேரிடர் பாதித்த பகுதிகளில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்! மழை வெள்ளம் வரப்போகிறது என முன்கூட்டியே அறிவித்தும் மாநில அரசு கண்டு கொள்ளவில்லை. பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளத் தில் இருந்து மக்களைக் காக்கவும் முயற்சி எடுக்காமல் இருக்கிறது ஜெ. அரசு என்கிற குரல் தமிழ்நாடு முழுவதும் வெளிப்படஆரம்பித்திருக்கிறது" என்றெல்லாம் "நக்கீரன்" எழுதியுள்ளது.

தங்கர்பச்சான் கருத்து
"புதிய தலைமுறை" இதழில் இயக்குனர் தங்கர்பச்சான் கூறும்போது, "ஈக்காட்டுத்தாங் கலில்தான் என்னோட வீடு இருக்கு. எங்க தெருவில் வசிக்கும் நண்பர்கள் இருபத்து நான்கு பேரோடு எட்டு நாட்களாக எங்கள் வீட்டு மாடியில் தான் இருந்தோம். ஹெலிகாப்டர் மூலமோ, படகு மூலமோ ஏதாவது உதவி கிடைக்குமா என்று எவ்வளவோ எதிர்பார்த்தோம். எனது விவசாய நிலம், இரண்டு கார், இரண்டு பைக்குன்னு சொத்துகளை இழந்திருக்கிறேன். அதுக்கு மேல பெரிய சொத்தான நான்கு நண்பர்களை இழந் திருக்கேன். செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு என்னங்கிறது தெரியும். ஏரியில் வந்து சேருகிற நீருக்கேற்ப உபரி நீரை வெளியேற்றக் கூடவா தெரியாது? ஏற்கனவே மழை நீரில் தத்தளித்துத் தவித்துக் கொண்டிருக்கிற மக்களிடம் சொல் லாமல் கொள்ளாமல் முன்னறிவிப்பின்றி திடீரென நடு இரவில் ஏரியை திறந்து விட்டதால் தான் இவ்வளவு பாதிப்பு. இப்போது உள்ள ஆட்சியாளர் களை நாம் எவ்வளவு முயன்றாலும் மாற்ற முடியாது. அதனால், வரவிருக்கும் ஆட்சியாளர்களை நாம் தான் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்" என்றெல்லாம் "புதிய தலைமுறை" இதழில் எழுதியிருக்கிறார்

ஜூவி சொல்வது என்ன?
ஓட்டு கேட்பதற்காக ஊர், ஊராகச் சென்று உங்கள் சகோதரி வந்திருக்கிறேன் என்று கூறிக் கொள்பவர், சென்னை மக்கள் துயரத்தில் தவித்த போது என்ன செய்தார்?" ஜூனியர் விகடன்" இதழ், "நவம்பர் 28ஆம் தேதி காலையிலேயே, பொதுப் பணித் துறை அதிகாரிகள், தலைமைச் செயலாளருக்கு "ரெட் சிக்னல்" காட்டி விட்டார்கள். "இரண்டு நாட்களில் அதிகமான மழை பெய்யப் போவதாகத் தகவல் வருகிறது. எனவே அதற்கு நாம் தயாராக வேண்டும்" என்பதுதான் இவர்களது கோரிக்கை. "மேலே கேட்டுச் சொல்கிறோம்" என்று சொல்லப்பட்டது. தகவல் இல்லை. 29ஆம் தேதி காலையில் இதே தகவல் பொதுப்பணி அதிகாரிகளால் தரப்பட்டது. மாலையும் தரப்பட்டது. அப்போது சிக்னல் எதுவும் காட்டப்படவில்லை. "இதோ முதல்வரைச் சந்திக்கப் போகிறேன், உடனே தகவல் தருகிறேன்" என்று தலைமை அதிகாரி ஒருவர் சொன்னாரே தவிர, தகவல் தரவில்லை. அரசாங்கக் கணக்குப்படியே இவ்வளவு தண்ணீரை ஒரே நாள் இரவில் திறந்ததால்தான் சென்னை மூழ்கியது" என்று தெளிவாகக் காரணத்தை ஜூ.வி. எழுதியுள்ளது.

ஒடிஷா, ஆந்திரா முதல்வர்கள்
இதை எழுதிய ஜூனியர் விகடன் ஒடிசா மாநிலத்திலும், ஆந்திர மாநிலத்திலும் இதுபோன்ற மழை வெள்ளம், புயல் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட போது, அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதையும் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதில், அந்த இரண்டு முதல்வர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு பேசுகின்ற புகைப்படங்களும் வெளிவந் துள்ளன. குறிப்பாக ஆந்திர முதல்வர், நண்பர் சந்திரபாபு நாயுடு பற்றி குறிப்பிடும்போது, "ஹைதரா பாத்தில் இருந்து விசாகப்பட்டினம் வந்த சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்று விடாமல் பார்த்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தினார். அவர் தங்குவதற்குக்கூட அங்கு சரியான இடம் இல்லை. அரசு விடுதிகள் புயலால் சேதம் அடைந்திருந்த தால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திலேயே தங்கியதுடன், அதிலேயே தூங்கினார். இரண்டாவது நாளாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். நிவாரணப் பணிகள் அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார். இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படையாகப் பேசினார்" என்று ஆந்திர முதல்வரைப் பற்றிய எழுதிய அதே இதழ், நம்முடைய தமிழக முதலமைச்சரைப் பற்றி என்ன எழுதியது தெரியுமா?

தமிழக முதல்வர்
"தமிழகத்தில் சென்னை, கடலூர் உட்பட வட மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதியில் இருந்து ஒரு மாதத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. வானிலை மைய இயக்குநர் ரமணன், கனமழை என்ற வார்த்தை யைத் தவிர "அதிகன மழை" என்றுகூட எச்சரித் துப் பார்த்தார். ஆனால், அந்த வார்த்தைகூட தமிழக அரசையும், முதல்வரையும் தூக்கத்தில் இருந்து எழுப்பவில்லை? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போலவோ, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப் போலவோ ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை? ஓட்டு கேட்பதற்காக ஊர், ஊராகச் சென்று உங்கள் சகோதரி வந்திருக்கிறேன் என்று கூறிக் கொள்பவர், சென்னை மக்கள் துயரத்தில் தவித்த போது என்ன செய்தார்?"என்று கேள்வி கேட்டுள்ளது.

ஓபிஎஸ் பதில்
ஆளுங் கட்சி இதற்கெல்லாம் பதில் கூறாவிட்டாலும், கமலஹாசன் பெயரில் வந்த ஒரு அறிக்கைக்கு நிதியமைச்சர் ஏழு பக்கங்களில் பதிலளிக்கிறார்.
நடுநிலை நாளேடுகள் எல்லாம் சென்னை வெள்ளம் தொடர்பாக தமிழக அரசைக் கேள்வி கேட்ட போது அரசின் சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

போராட்டம் இதனால்தான்...
அதனால்தான் இதற்குக் காரணம் யார் என்பதை மக்களிடையே தெளிவுபடுத்த தி.மு. கழகம் நீதி விசாரணை வேண்டுமென்று கோரியது. அதற்கு எந்த விளக்கமோ, பதிலோ கிடைக்காத காரணத்தால்தான் ஜனவரி 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையிலே நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது உங்கள் ஒவ்வொருவருடைய கடமை. கலந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் சந்திப்போம்!
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications