செங்கல் சூளை அதிபர் மிரட்டுகிறார்.. கலெக்டர் அலுவலகத்தைக் கலக்கிய பெண்ணின் புகார்!
நெல்லை : நெல்லை அருகே செங்கல் சூளையில் தங்கள் குடும்பத்தையே கொத்தடிமையாக வைத்திருப்பதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஊத்தான்குளத்தை சோ்ந்த சரோஜா என்பவர் நெல்லை கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

நானும் என் கணவரும்
நானும், எனது கணவர் பாண்டியும் ஆலடிப்பட்டி ஊரை சோ்ந்தவருக்கு சொந்தமான சிவகிரி ஈச்சம்பொட்டல்புதூரில் உள்ள செங்கல் சூளையில் ரூ.90 ஆயிரம் முன் பணம் பெற்று கடந்த இரணடு வருடங்களாக வேலை பார்த்து வந்தோம்.

செங்கல் அறுக்க முடியவில்லை
வேலைக்கு சோ்ந்த 4 மாதத்தில் என் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதிக செங்கல் அறுக்க முடியவில்லை. இதனால் செங்கல் சூளை உரிமையாளர் எங்களை அழைத்து உங்கள் மகன், மருமகளை வேலையில் சோ்த்து விட்டு பணத்தை கழித்துக்கொள்ளுங்கள் என்று கடுமையாக மிரட்டினார்.

காரில் கடத்தி மிரட்டல்
அத்தோடு நிற்காமல் அதிமுக பிரமுகர் ஒருவர் மூலம் எனது மகன் கண்ணன், மருமகள் கலையரசி ஆகியோரை காரில் கடத்தி வந்தனர். அவர்களை அடைத்து வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்கினர். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

எங்களை விடவில்லை
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனைத்து தொழிலாளர்களும் கணக்கு முடித்து ஊர் திரும்பினர். ஆனாலும் எங்களை விடவில்லை.

பணத்தைக் கட்டு பட்டாவை வாங்கிக்கோ
உங்களுக்கு ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் பாக்கி உள்ளது. வீட்டை விற்று பணத்தை கட்டு என்றனர். எங்களது வீட்டு பட்டாவையும் வாங்கி கொண்டனர். அவர்களிடம் ரூ.70 ஆயிரம் இரு தவணையாக கொடுத்து விட்டு என் கணவரும், மகனும் கூலி வேலைக்கு கேரளாவுக்கு சென்று விட்டனர்.

ஆபாசமாக பேசி மிரட்டுகிறார்கள்
அன்றிலிருந்து என்னை போனில் செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆபாசமாக பேசி மிரட்டி வருகிறார். மேலும் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்த எனது கணவர், மகன் மீது வழக்கு இருப்பதாக கூறி திடீரென அழைத்து சென்ற போலீசார் வெள்ளை காகிதத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கினர்.

ரவுடிகளுக்கு பயந்து
இதனால் நாங்கள் ரவுடிகளுக்கும், போலீசாருக்கும் பயந்து போய் உள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications