கைதிகள் முன்பு விஷ்ணுப்பிரியாவை அவமானப்படுத்தினர்... யுவராஜ் பரபரப்புத் தகவல்
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஷ்ணுப்பிரியாவுடன் அவர் பேசிய பேச்சையும் வெளியிட்டுள்ளார். விஷ்ணுப்பிரியாவை கைதிகள் முன்பு போலீஸ் உயர் அதிகாரிகள் அவமானப்படுத்தினர் என்று கூறியுள்ள யுவராஜ், இந்த அதிகாரிகளை மேற்கு மண்டல ஐஜி சங்கர்தான் பாதுகாப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையை போலீஸார் வெளியிடாவிட்டால் தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ், ஜாதி மாறிய காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருப்பவர் யுவராஜ். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது வீரப்பன் ஸ்டைலில் ஆடியோ மட்டும் வெளியிட்டு வருகிறார்.

இவரைக் காக்கும் வகையில் உயர் அதிகாரிகள் செயல்பட்டு விஷ்ணுப்பிரியாவுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இவர் விஷ்ணுப்பிரியாவை உயர் அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இன்று விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பாக புதிய ஆதாரத்தை வெளியிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று ஒரு ஆடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் விஷ்ணுப்பிரியாவுடன் அவர் பேசிய பேச்சும் இடம் பெற்றுள்ளது. பல தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 51 நிமிடங்கள் அந்த வீடியோ ஓடுகிறது.
இதில் நாமக்கல் எஸ்பி செந்தில்குமார், கூடுதல் டிஎஸ்பி சந்திரமோகன், மேற்கு மண்டல ஐஜி சங்கர் ஆகியோரை அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யுவராஜின் பேச்சிலிருந்து...
- உயர் அதிகாரிகள் பல்வேறு விதங்களில் விஷ்ணுப்பிரியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
- விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்ய உயர் அதிகாரிகள் கொடுத்த நிர்ப்பந்தமே காரணம்.
- கைது செய்யப்பட்டவர்கள் முன்னிலையில் விஷ்ணுப்பிரியாவை உயர் அதிகாரிகள் அவமானப்படுத்தினர்
- இவர்களுக்கு மேற்கு மண்டல ஐஜி சங்கர் பாதுகாப்பாக உள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
- விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான தகவல்களை, உண்மையை அதிகாரிகள் வெளியிடாவிட்டால் நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்.
- கோகுல்ராஜ் வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டதில் விஷ்ணுப்பிரியாவுக்கு உடன்பாடு இல்லை.
- கைது செய்யப்பட்டவர்களை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இது வெளியில் வரவில்லை.
- கோகுல்ராஜ் வழக்கில் எனக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை. நான் ஏற்கத் தயார்.
- கோகுல்ராஜ் வழக்கில் இப்போது அரசியல் புகுந்து விட்டது. அதில் நியாயம் கிடைக்காது.
- விஷ்ணுப்பிரியா மரணத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் போலீ்ஸ் அதிகாரிகள்.
- விஷ்ணுப்பிரியா காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாக கூறுவது அதில் ஒன்று.
- உண்மை மறைந்து விடக் கூடாதே என்பதற்காக இதை வெளியிட்டுள்ளேன்.
- கோகுல்ராஜ் கொலை வழக்கில் தான் நிர்ப்பந்திக்கப்படுவதாக என்னிடமே கூறினார் விஷ்ணுப்பிரியா.
- இந்த வழக்கால் தான் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
- தான் சரணடைந்தால்தான் மன உளைச்சல் போகும் என்றும் அவர் கூறினார்.
- சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்தால் சரணடைகிறேன் என்று நான் அவரிடம் கூறியிருந்தேன்
டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவுடன் தொலைபேசிப் பேச்சு
இந்த ஆடியோவில் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவுடன், யுவராஜ் உரையாடுவது போன்ற ஆடியோவும் இடம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
