மக்கள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கின்றனர்..ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விவகாரம் பற்றி டிடிவி தினகரன்
தஞ்சாவூர்: ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது தொடர்பான விவகாரம் குறித்த கேள்விக்கு, டி.டி.வி.தினகரன் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அமமுக நிச்சயமாக முத்திரை பதிக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களின் போது ஆம்புலன்ஸ் வந்தால் தொண்டர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுவார்கள். ஆனால் ஆம்புலன்ஸில் ஆள் இல்லாததால், அது அதிமுக கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அந்தக் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்து வருகிறது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது தொடர்பான விவகாரம் குறித்த கேள்விக்கு, டி.டி.வி.தினகரன் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசுகையில், 2026 சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. யாரிடமும் மண்டியிடாத இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். நாம் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். உறுதியான, சரியான வழியில் நாம் செல்வோம். வரும் தேர்தலில் அமமுக முத்திரை பதிக்கும். 2026 பொது தேர்தலில் நாம் யார் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உறுதியாக செயல்படுவோம் என்றார்.
தொடர்ந்து டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது தொடர்பான கேள்விக்கு, மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications