‛‛உள்ளே வரக்கூடாது’’.. வைத்தீஸ்வரன் கோவிலில் மாற்றுத்திறனாளிக்கு அனுமதி மறுப்பு.. காரணத்தை பாருங்க
தஞ்சாவூர்: சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் சக்கர நாற்காலியில் சென்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக மாற்றுத்திறனாளி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரசித்திப்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நியைில் தான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் நாராயணன் என்பவர் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றார். ரமேஷ் நாராயணன் ஒரு மாற்றுத்திறனாளி. அவரால் நடக்க முடியாது. இதனால் வீல் சேரில் தான் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அவர் சென்றார்.
அப்போது அவரை அங்கிருந்தவர்கள் வைத்தீஸ்வரனை தரிசிக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது வைத்தீஸ்வரனை வீல்சேரில் சென்று தரிசிரிக்க முடியாது. வேண்டுமென்றால் தவழ்ந்து போய் தரிசனம் செய்யுங்கள் எனக்கூறி ரமேஷ் நாராயணனை தடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ரமேஷ் நாராயணன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
என் பெயர் ரமேஷ் நாராயணன். நான் தஞ்சாவூரை சேர்ந்தவன். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்தேன். நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னால் நடக்க முடியாது. கோவிலில் எல்லா தரிசனத்தையும் செய்தேன். ஆனால் வைத்தீஸ்வரனை மட்டும் தரிசனம் செய்யவில்லை. ஏனென்றால் வைத்தீஸ்வரன் சன்னத்தியின் முன்பு இருந்த வரிசையில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வீல் சேரில் சென்று என்னை தரிசனம் செய்ய அனுமதி மறுத்துவிட்டனர்.
சாமி முன்பு வீல்சேரில் செல்வது என்பது ஐதீகம் இல்லை என கூறிவிட்டனர். அதேவேளையில் வீல்சேரை விட்டு வந்து சாமியை பாருங்கள் என கூறினர். மேலும் வீட்டில் எப்படி நடமாடுவீர்கள்? என்று கேட்டனர். அதற்கு தவழ்ந்து செல்வேன் என்றபோது தவழ்ந்து சென்று தரிசனம் செய்யும்படி கூறினர். இது எனக்கு வருத்தமளிக்கிறது. என்னை மாற்றுத்திறனாளியாக நினைக்க வைக்கிறீர்கள்.
மேலும் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். கோவில் ரூல்ஸ் இதுதான். கோவிலின் ஐதீகம் இதுதான். நாங்கள் எதையும் மாற்ற முடியாது என கூறிவிட்டனர். இது எந்த வகையான நடைமுறை என எனக்கு தெரிவில்லை. இந்த பதிவை நான் ரொம்ப வருத்தத்தில் தான் பதிவிடுகிறேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்'' என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications