16 கொலைகள்.. பண மோசடி.. தஞ்சை ரவுடிக்கு தூக்கு தண்டனை வழங்கியது கும்பகோணம் நீதிமன்றம்
தஞ்சை: தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அவரது கூட்டாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரவுடி கட்ட ராஜா மீது 16 கொலை வழக்குகள் உள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் சென்னியமங்கலம் சாலையைச் சேர்ந்த சுவாமிநாதன் மகன் செந்தில்நாதன் (30).

இருவர் மீது வழக்கு
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்கிற கட்ட ராஜாவும் நண்பர்கள். இருவர் மீதும் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், கோவையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கட்ட ராஜாவை போலீர் தேடி வந்தனர்.

கட்ட ராஜாவுக்கு பணம் கொடுக்கல் வாங்கல்
செந்தில்நாதன் கட்ட ராஜாவுக்கு பல லட்சம் கொடுக்க வேண்டியிருந்ததாம். இதில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு பகை உண்டானது. தன்னை கட்ட ராஜா கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கொல்லப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் செந்தில்நாதன் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

டாஸ்மாக் பார்
இந்நிலையில் வலங்கைமான் முடிகொண்டான் ஆற்றின் கரையில் உள்ள தனக்குச் சொந்தமான டாஸ்மாக் பாரில் இருந்த செந்தில்நாதனை கட்ட ராஜாவின் ஆட்கள் சிலர் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஆற்றின் வடக்கு கரையில் பணம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த கட்ட ராஜா அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் செந்தில்நாதன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தூக்கு தண்டனை
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பட்டீஸ்வரம் போலீசார் தலைமறைவான கட்ட ராஜாவை மற்றும் அவரது கும்பலை அண்மையில் கைது செய்தனர். இந்த நிலையில் செந்தில்நாதன் கொலை வழக்கில் ரவுடி கட்ட ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பெஞ்சமின் தீர்ப்பு வழங்கினார். கட்ட ராஜாவின் கூட்டாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications