கும்பகோணம்.. டூவீலரில் காரை மோதி ஆசிரியையை கடத்திய இளைஞர் சிக்கினார்!
Recommended Video

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஒரு ஆசிரியயை, அவரது டூவீலரில் காரை விட்டு மோதி கீழே விழ வைத்து பின்னர் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸார் பிடித்து விட்டனர்.
கும்பகோணம் லால் பகதூர் சாலையில் ஏஜேசி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு கணக்கு ஆசிரியையாக பணியாற்றுபவர் காயத்ரி (31). 3 மற்றும் 4ம் வகுப்புகளுக்கு ஆசிரியையாக உள்ளார்.

நேற்று மாலை 5 மணிக்கு பள்ளியை விட்டு டூவீலரில் தனது வீட்டுக்குக் கிளம்பினார் காயத்ரி. அவரது வீடு அண்ணா நகரில் உள்ளது. அப்போது மகாமக குளம் அருகே நீல நிற குவாலிஸ் கார் ஒன்று காயத்ரி டூவீலரில் மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது காரிலிருந்து இறங்கிய சிலர் காயத்ரியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.
தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த காயத்ரி குடும்பத்தினர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரனையை தீவிரப்படுத்தினர்.

கடத்தப்பட்ட ஆசிரியைக்கு திருமணம் ஆகவில்லை. காயத்ரியின் தாய் மீரா, தந்தை கிரிராசன். பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவர் கொடுத்த புகாரில் கார்த்திக் என்பவர் தனது மகளைக் கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது கார்த்திக் சிக்கி விட்டார். அவரிடமிருந்து ஆசிரியை காயத்ரியும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications