லட்டு போல் தீர்ப்பு.. தர்மம் மீண்டும் வெல்லும்! துள்ளி குதிக்கும் ஓபிஎஸ்.. எவ்வளவு ஆனந்தமா பேசுறாரு!
தேனி: இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது. இந்த நிலையில் பல நாட்களுக்குப் பிறகு தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பால் உற்சாகத்தில் இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. 'தர்மம் மீண்டும் வெல்லும்' என நம்பிக்கையோடு பேசுகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட சிலர் தொடர்பு கொண்டனர்.

இதற்கிடையே தங்கள் கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது.
இது தொடர்பாக பதில் அளித்து இருந்த தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரங்களை உரிமையியல் நீதிமன்றங்கள் விசாரித்தாலும் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தான் விசாரித்தது என கூறி இருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது. கட்சியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் இல்லாத நபர்களுக்கு எப்படி அதிகாரம் இருக்கும் எப்படி தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும் என அவர் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் தங்கள் தரப்புக்கு ஆதரவாகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தீர்ப்பு வந்திருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
மேலும் டெல்லி தலைமையின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதால் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தர்மம் மீண்டும் வெல்லும் என உற்சாகம் ததும்ப பேசியுள்ளார் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான ஓபிஎஸ்.
தேனியில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்," உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்கும் உரிமை இருக்கிறது என தேர்தல் ஆணையம் மூலமாகவே உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளதோ அதே அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ளது என அந்த மனுவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் அதிமுக உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது" என கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் அதிமுக விவகாரத்தை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் அவரது மகன் ஓபி ரவீந்திரநாத், பெங்களூரு புகழேந்தி, முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு மீது தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக விவகாரங்களில் மீண்டும் தேர்தல் ஆணையம் தலையிடும். இது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி உருவாகுமா என்பதுதான் தற்போதைய அரசியல் ஹாட் டாபிக்.












Click it and Unblock the Notifications