சென்ட்ரல்-போடி ரயில் சூப்பர் மாற்றம்.. பல்லவன் போல்.. வைகை எக்ஸ்பிரஸ் போடி வரை இயக்கப்படுமா?
தேனி: சென்னை சென்ட்ரல்-போடிநாயக்கனூர் ரயில் இனி ஆறு நாள் இயக்கப்பட உள்ள செய்தியை மத்திய அமைச்சர் எல் முருகன் நேற்று பகிர்ந்தார். இதனை கேள்விப்பட்ட தேனி மாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் சென்னைக்கு நேரடியாக செல்ல ரயில்கள் இல்லை..அதேபோல் மதுரைக்கு காலையில் செல்லவும் ரயில்கள் இல்லை.. எனவே வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை போடிநாயக்கனூர் வரை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று மத்திய அமைச்சர் எல்முருகன் , தமிழகத்துக்கு 4 புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக கூறினார். இது தொடர்பாக மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், தமிழகத்திற்கு தேவையான கூடுதல் ரயில்கள், சில ரயில்களின் சேவையை அதிகரித்தல், கூடுதல் நிறுத்தங்கள் தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.

அதன்படி பாலக்காடு-பொள்ளாச்சி மின்சாரப் பயணிகள் ரயில்கள், மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயில், போத்தனூர்-தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில், நெல்லை-மங்களூரு விரைவு ரயில் ஆகிய 4 புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்ட்ரல்-போடி விரைவு ரயில்
மேலும் மங்களூரு சென்ட்ரல்-ராமேசுவரம் விரைவு ரயில் திருூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரம்-ராமேசுவரம் விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும், திருச்சி-காரைக்குடி பயணிகள் ரயில் வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும். எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-போடி விரைவு ரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும். கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
தேனி மக்கள் மகிழ்ச்சி
சென்னை சென்ட்ரல்-போடி ரயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தினசரி ரயிலாக மாறி உள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினை தேனி மாவட்ட மக்கள் கொண்டாடுகிறார்கள். ஏனெனில் கேரளாவின் எல்லையில் உள்ள தேனி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் போனது. இந்த மாவட்டத்தின் எல்லைகளில் தான் மூணாறு, தேக்கடி, கொடைக்கானல் இருக்கின்றன்.
மூணாறு, கொடைக்கானல்
கேரளாவிற்கு கடவுள் தந்த பரிசான இடுக்கி மாவட்டத்திற்கு தேனி தான் பிரதான வழி. எனவே சுற்றுலாவிற்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாகும். சபரிமலை செல்லும் பயணிகளுக்கும் வரப்பிரசாதம் ஆகும். வாகமன், இடுக்கி அணை செல்வோர் இனி ரயிலில் கோட்டயம் போக தேவையில்லை.. எளிதாக போடி வந்து போக முடியும். மிக அழகான ரயில் பாதை மற்றும் மலைப்பாதைகளை கொண்ட தேனி மாவட்டம், பல்வேறு ஆறு, அருவிகளையும் கொண்டுள்ளது. எனவே சுற்றுலா துறை வளர்ச்சி பெறும். அதேபோல் தேனி மாவட்ட மக்களும் எளிதாக ஏலக்காய், பூண்டு, திராட்சை, நெல், காய்கறிகள் போன்ற விளைபொருட்களை எளிதாக கொண்டு செல்ல முடியும். பயணங்களும் எளிதாக போகிறது. ஒரு ரயில் பயணம் தேனி மாவட்டத்தின் பொருளாதாரத்தையே மாற்ற போகிறது.
தேனி மாவட்ட மக்கள் கோரிக்கை
அதேநேரம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரைக்கு பதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைத்துள்ளார்கள். மதுரையில் உசிலம்பட்டி வரை உள்ள மக்கள், தேனி மாவட்டம் முழுவதும் உள்ள 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குக்கும், இடுக்கி மாவட்ட மக்களுக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை இயக்கினால் பெரிய பயனுள்ளதாக இருக்கும். எளிதாக பகல் நேரத்தில் சென்றுவர இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.
வைகை தேனி வருமா
ஏற்கனவே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி வரை தான் சென்று வந்தது. அது தற்போது காரைக்குடி வரை செல்கிறது.. அதேபோல் மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை, வைகையின் பிறப்பிடமாக தேனிமாவட்டத்திற்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கையை மக்கள் வைத்துள்ளார்கள். அதேபோல் பகல் நேரத்தில் அதாவது காலை நேரத்தில் போடியில் இருந்து மதுரை செல்லும் வகையில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்றும் மாலையில் மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு ரயிலை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ரயில், மதுரையில் வேலை செய்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..












Click it and Unblock the Notifications