தேனி அருகே முட்புதரை தோண்டினால் அவ்வளவும் தங்கம்.. அம்சராஜன் கும்பல் அப்பட்டமாக சிக்கியது எப்படி?
தேனி: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் கொள்ளை அடித்ததும், கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பங்களா, ஒரு நூற்பாலையை விலைக்கு வாங்கிய கும்பலைச் சேர்ந்தவர்கள் சிறையில் உள்ளனர். இவர்களில் இரண்டு பேரை தேனி போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது, சுமார் ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதரில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கொள்ளையர்கள் அடையாளம் காட்டினார்கள்.
தேனி மாவட்டம் அல்லிநகரம், தேனி, வீரபாண்டி உள்ளிட்ட தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. பூட்டிய வீடுகளை குறிவைத்து இந்த திருட்டு சம்பவங்களை கொள்ளையர்கள் அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். இவர்கள் தான் திருடினார்கள் என்பது குறித்து தடயங்கள் இல்லாத காரணத்தால், திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் தவித்து போயிருந்தார்கள். குறிப்பாக தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் மட்டும் 9 வீடுகளில் சுமார் 88 பவுன் நகைகள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவை திருடு போயிருந்தது. அந்த வழக்குகளிலும் திருடர்கள் குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் தவித்து வந்தனர்.

இதையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஜூன் மாதம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தார்கள்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் கொள்ளை அடித்ததும், கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பங்களா, ஒரு நூற்பாலையை விலைக்கு வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த சிலர் கோவை மாவட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார்கள். இதனால், கோவை போலீசாரும் அவர்களில் சிலரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கொள்ளையர்களில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி குருவம்மாள் நகரை சேர்ந்த முருகன் மகன் மூர்த்தி (வயது 30), பெரியகுளம் வாகம்புளி தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் அம்சராஜன் ஆகியோருக்கு பழனிசெட்டிபட்டி பகுதிகளில் சில திருட்டு வழக்குகளில் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகேட்டு பழனிசெட்டிபட்டி போலீசார் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். இதில் அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து கோவை சிறையில் இருந்து மூர்த்தி, அம்சராஜன் ஆகிய 2 பேரையும் தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பழனிசெட்டிபட்டி பகுதியில் மட்டும் 9 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கொள்ளையடித்த தங்க நகைகளை உருக்கி வைத்துக்கொண்டும், வெள்ளி பொருட்களை விற்றும், கொள்ளையடித்த பணத்தை வைத்தும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள்.
மேலும் பழனிசெட்டிபட்டி பகுதியில் கொள்ளையடித்த 88 பவுன் நகைகளை உருக்கி 6 தங்க கட்டிகளாக மாற்றியதும், அவற்றை மாரியம்மன் கோவில்பட்டி அருகில் ஒரு முட்புதரில் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளார்கள். இதையடுத்து அவர்களை அந்த முட்புதருக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு பாலித்தீன் கவரில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்த 88 பவுன் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.49 லட்சம் ஆகும். அதைத்தொடர்ந்து, 7 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து அவர்கள் 2 பேரையும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications