தேனி கோயிலில் ஆச்சரியம்.. டக்னு பறந்து வந்த சேவல்.. கொடி மரத்தில் ஒற்றைக்காலில்.. பக்தர்கள் பரவசம்
தேனி: தேனி மாவட்டத்தில் தைப்பூச திருவிழா கொண்டாட்டம் களைகட்டி கொண்டிருக்கிறது.. இதனிடையே, போடி முருகர் கோயிலில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இது பார்த்த பக்தர்களும் ஆச்சரியத்தில் திகைத்து போய் உள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 350 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து பிடி மண் எடுத்து வரப்பட்டு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோயிலில், ஆடிக் கிருத்திகை, கார்த்திகை தீபம், கந்த சஷ்டி விழா உள்ளிட்ட விசேஷங்கள் சிறப்பாக நடைபெறும்..
பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். அதேபோல, இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கமாகும்.
திருமண தடை: திருமணத்தடை உள்ளவர்கள், கோயிலுக்கு அருகிலுள்ள வராக நதியில் நீராடி, பின்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் அவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பார்கள்.. அதேபோல, போல், குழந்தைப்பேறு வேண்டும் கணவன் - மனைவி இருவரும் இங்கு நீராடிவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.
இந்நிலையில், இந்த கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டன.. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது திடீரென கோவிலுக்குள், சேவல் ஒன்று பறந்து வந்தது.
ஒற்றைக்கால்: அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே பறந்து வந்தது.. பிறகு, கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றுகொண்டது.. பக்தர்கள் அனைவருமே இந்த சேவலையே கவனித்து கொண்டிருந்தார்கள்.. முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல ஒற்றைக்காலை தூக்கியபடி அந்த சேவல், சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
இதைப் பார்த்த பக்தர்களுக்கு புல்லரித்துப்போய்விட்டது.. பரவசமடைந்து முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.. இதனால் கோயில் வளாகத்தில் அரோகரா சத்தம் நாலாபக்கமும் எதிரொலித்தது.. சிலர், சேவலை வீடியோ, போட்டோக்களை எடுக்க துவங்கினார்கள்..
வீடியோ: ஆனால் பக்தர்கள் கோஷம் எழுப்பியபோதும், தன்னை போட்டோ, வீடியோ எடுத்த போதம் அதனை பொருட்படுத்தாமல் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் முருகப்பெருமானை வழிபடுவது போல நின்றது.
தமிழ் கடவுளான முருகனுக்கு சேவற்கொடியோன் என்ற பெயரும் உண்டு. அவருடைய கொடியில் சேவல் சின்னம் இடம் பெற்றிருக்கும். எனவேதான், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு சேவலை காணிக்கையாக செலுத்துவார்கள்...
அதன்படியே, ஒரு பக்தர் காணிக்கையாக செலுத்திய சேவல் ஒற்றைக்காலில் நின்று கிருத்திகை நாளில் முருகப்பெருமானை மனமுருக வழிபட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. இந்த காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications