குருவாயூர் எஸ்பிரஸ் ரயிலுக்குள் கடும் சண்டை.. அபாய சங்கிலியை இழுத்த பயணிகள்.. அதிர்ந்த திருநெல்வேலி
திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள திருநெல்வேலியில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதையடுத்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை சென்னையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் புறப்பட்டு வந்தது. இந்த ரயிலில் கார்டுக்கு முந்தைய முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதில் சிலர் மதுபோதையில் பயணம் செய்து வந்துள்ளாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

அந்த ரயில் திருநெல்வேலி ஜங்சனுக்கு இரவு 8.35 மணி அளவில் வந்தது. அப்போது, அங்கு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த ரயில் கார்டு பைஜூ, பயணிகளை எச்சரித்தார். பின்னர் 9 மணி அளவில் மீண்டும் ரயில் புறப்பட்டது. அப்போது பயணிகள் இடையே தகராறு முற்றியதில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதைக்கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
இதனால் திருநெல்வேலி மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இருபுறத்தில் கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்து திருநெல்வேலி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் ரயிலில் இருந்து 4 பேர் இறங்கினார்கள். அதில் ஒருவர் ஜசில் ஜமால் (வயது 35) என்பதும், மேலும் ஒரு வாலிபர், 2 இளம்பெண்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள், சக பயணிகள் தாக்கியதில் 2 பேருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதில் 2 பேர் லேசான காயம் அடைந்திருந்தனர்.. இதையடுத்து போலீசார், 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ரயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.
இதனிடையே திருநெல்வேலி ரயில்வே போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று 4 பேரிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவம் நடந்த பெட்டியில் உள்ள பயணிகளிடமும், கார்டு பைஜுவிடமும் விசாரணை நடத்துமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications