ஜெயக்குமார் மரண வழக்கு கைக்கு வந்ததுமே விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி.. வீடு, தோட்டத்தில் பரபர ஆய்வு!
நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், உடனடியாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், திசையன்விளை அருகே கடந்த மே 4ஆம் தேதி தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது மகன் புகார் அளித்த அன்றே எரிந்த நிலையில் தோட்டத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.

ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில் சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஜெயக்குமார் தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் புகார் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாக தெரியவந்தது. இந்தக் கடிதம் தொடர்பாகவும் போலீசார் பலரிடம் விசாரணை நடத்தினர்.
ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்ட நிலையில் உடல் எரிக்கப்பட்டது என்ற பகீர் தகவலும் வெளியாகி இருந்தது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் பலரிடமும் விசாரணையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும், போலீசார் நடத்தி வந்த விசாரணையில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஆய்வாளர் உலகராணி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதுமே, சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உடனடியாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முதற்கட்டமாக திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஜடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஜெயக்குமார் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திலும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications