அடுத்த ஷாக்.. நெல்லையில் பஞ்சாயத்து உறுப்பினர் அரிவாளால் வெட்டி படுகொலை.. பதற்றம்- போலீஸ் குவிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தங்கையுடன் சேர்ந்து பள்ளி மாணவனை சாதி பாகுபாட்டால் சக பள்ளி மாணவர்கள் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் இன்று பஞ்சாயத்து உறுப்பினரை சுற்றிவளைத்த கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் வடக்கூரை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு வயது 33. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்தார். ராஜாமணி தற்போது பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவர் ஆடுகளும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று ராஜாமணி தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். கீழநத்தம் அருகே வாய்க்கால் பாலம் பகுதியில் ஆடுகள் மேய்ந்தன. அதன்பிறகு இரவு நேரம் நெருங்கியதால் அவர் ஆடுகளை வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
இந்த வேளையில் அவரை திடீரென ஒரு கும்பல் வழிமறித்தது சரமாரியாக வெட்டிவிட்டு எஸ்கேப் ஆனது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராஜாமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இரவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
முன்னதாக மருத்துவமனை முன்பு ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி இருந்தது. ராஜாமணி இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையின் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார், தாசில்தார் உள்ளிட்டவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி அவர்கள் கூறினர். இருப்பினம் அவர்கள் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து மறியலை கைவிட மறுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக எஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். ராஜமணியை வெட்டியது யார்? முன்விரோதம் அல்லது வேறு காரணத்தினால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 9 ம் தேதி பட்டியலின மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை பள்ளி மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தின் வடு இன்னும் அனைவரின் மனதில் இருந்து நீங்கவில்லை. இத்தகைய சூழலில் மீண்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் பஞ்சாயத்து உறுப்பினர் ராஜாமணி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications