‛கருப்பி’ நாய் இறந்தது.. ‛பரியேறும் பெருமாள்’ படத்தை விட மோசமாக நடந்த மரணம்.. காரணமான பட்டாசு
திருநெல்வேலி: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதல் படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ‛கருப்பி' என்ற பெயரில் நடித்து கவனம் ஈர்த்த கருப்பு நிற சிப்பிபாறை நாய் பரிதாபமாக இறந்துள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை விட மோசமாக கருப்பி நாய் மரணத்தை தழுவி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மாரி செல்வராஜ். இவர் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளான மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி தனது திரைப்படங்களில் காட்சிகளை அமைத்து வருகிறார்.

அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். நடிகர் கதிர் இந்த படத்தில் நடித்தார். திருநெல்வேலி மாவட்டத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்த திரைப்படத்தில் ‛கருப்பி' என்ற பெயரில் சிப்பிபாறை நாய் நடிக்க வைக்கப்பட்டு இருந்தது. இந்த நாயை நடிகர் கதிர் வளர்த்து வேட்டைக்கு பயன்படுத்தி வருவார். அப்போது ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் அந்த நாயை பிடித்து ரயில் தண்டவாளத்தில் கட்டிப்போடுவர். ரயில் மோதி ‛கருப்பி' நாய் இறந்துவிடும்.
இந்த இழப்பை தாங்க முடியாமல் கதிர் கதறி அழுவார். அதோடு கருப்பி நாய்க்கு என்று தனி ஒப்பாரி பாடல் இடம்பெற்றிருந்தது. ‛‛அடி கருப்பி.. அடி கருப்பி..'' என தொடங்கும் அந்த பாடல் அனைவரையும் கலங்க வைக்கும். படப்பிடிப்புக்கு பிறகு இந்த கருப்பி நாய் படத்தில் நடித்த விஜயமுத்து என்பவர் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ‛கருப்பி' நாய் விஜயமுத்து வீட்டு அருகே சுற்றி திரிந்தது. பட்டாசு வெடித்தபோது அந்த சத்தம் கேட்டு ‛கருப்பி' நாய் பயந்து ஓடியது. அப்போது சாலையில் வந்த வாகனம் ஒன்று ‛கருப்பி' நாய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ‛கருப்பி' நாய் அப்படியே இறந்தது. நாய் மீது மோதிய வாகனம் என்ன? என்பது தெரியவில்லை.
இறந்த ‛கருப்பி' நாயை விஜயமுத்து மற்றும் அவரது நண்பர்கள் இறுதி சடங்குகள் செய்து பரம்பு பகுதியில் அடக்கம் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி ‛கருப்பி' நாய் இறந்த சம்பவம் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications