எங்களை காப்பாற்றுங்கள்.. இந்த ஊரில் எங்களால் வாழ முடியாது.. நாங்குநேரி சிறுவனின் தாய் பேட்டி
திருநெல்வேலி: "என்னுடைய மகன் நன்றாக படிப்பான், கடந்த 10 நாட்களாக அவன் பள்ளிக்கு செல்லவில்லை. கடந்த புதன்கிழமை பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு பள்ளியில் விட்டு வந்தேன்.. என் கண் முன்னே என் மகனை வெட்டி விட்டனர்"..என நாங்குநேரியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரையின் தாயார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
நாங்குநேரி பெருந்தெரு அம்பிகா - முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரையுடன் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் , அந்த மாணவரிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், கையில் காசு வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வது தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்தார்களாம்.

இதில் மாணவன் சின்னத்துரை கையில் வைத்திருக்கும் காசு மூலமாக அவர்களுக்கு பொருட்களை வாங்கி கொடுப்பதும், ஹோட்டல்களில் வாங்கி தின்றுவிட்டு அதற்கு சின்னதுரையை பணம் கொடுக்க சொல்வதும் நடந்து வந்ததாம்.
தொடர்ந்து நடந்த சாதிய ஒடுக்குமுறை காரணமாக சின்னதுரை பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சின்னதுரையை தாயார் அம்பிகா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு சின்னதுரை, சக மாணவர்கள் தன்னை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கிறார்; ஆசிரியரும் சின்னதுரையை துன்புறுத்திய குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளார்.
நடந்த எல்லாவற்றையும் கூறி ஆசிரியர் தங்களை எச்சரிக்கும் அளவுக்கு வந்துவிட்டதால், சின்னத்துரையை கொன்றுவிட வேண்டும் என என சில மாணவர்கள் வெறியுடன் சுற்றியுள்ளனர்.இதன்படியே சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையை சரமாரியாக வெட்டி இருக்கிறார்கள். தன் மீது விழும் வெட்டை தடுக்க கைகளைக் கொண்டு தடுக்க முற்பட்ட சின்னத்துரை முயன்றதால் தலையில் ஒரு வெட்டு, வலது கையில் மூன்று வெட்டு, இடது கையில் இரண்டு வெட்டு, தொடை, பாதம் என பல இடங்களில் பலமாக வெட்டி உள்ளார்கள். இதனை தடுக்க சென்ற சின்னதுரையின் சகோதரிக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வந்த முதியவரை தள்ளிவிட்டு இருக்கிறார்கள் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர், இடைநின்ற 2 மாணவர்கள் உள்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்றும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து நேற்று வெளியிட்ட ட்வீட் பதிவில், நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாங்குநேரி மாணவன் சின்னத்துரையின் தாய் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னுடைய மகன் நன்றாக படிப்பான், கடந்த 10 நாட்களாக அவன் பள்ளிக்கு செல்லவில்லை. கடந்த புதன்கிழமை பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு பள்ளியில் விட்டு வந்தேன்.. என் கண் முன்னே என் மகனை வெட்டி விட்டனர்.
எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்.. இந்த ஊரில் எங்களால் வாழ முடியாது, வாழ பிடிக்கவில்லை; முதலமைச்சர் என்னிடம் பேசினார் தகுந்த பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்தார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications