நெல்லை கோர்ட் வாசலில் கொல்லப்பட்ட மாயாண்டி! காக்கி மயமான நீதிமன்றங்கள்.. கையில் பெரிய தூப்பாக்கி!
நெல்லை: நெல்லை நீதிமன்றத்தின் அருகே மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் நெல்லை கொலை சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சாந்தி நகர் பகுதியில் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. கடந்த 20ஆம் தேதியன்று காலை வழக்கம் போல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கறிஞர்கள் ஊழியர்கள் பணிக்கு சென்றனர்.

அப்போது வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்த இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், சிறுது நேரத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
நெல்லை நீதிமன்றத்தில் கொலை:
இந்நிலையில், இளைஞரை கொன்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிய நிலையில் ஒருவரை வழக்கறிஞர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர், கீழநத்தத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பதும், கொலை வழக்கில் ஆஜராக வந்தவரை கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற வாயிலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறை அலட்சியம்:
நீதிமன்றத்தில் மாயாண்டி ஆஜராகி விட்டு வெளியே வந்த நிலையில் அவரை சுற்றி வளைத்த கும்பல் பொதுமக்கள் நடமாட்டத்தையும் கண்டு கொள்ளாமல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட போலீசாரின் காவலையும் மீறி படுகொலை நடந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களுக்கு வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே வளாகங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி இருந்தும் போலீசாரின் சோதனையை மீறி கொலையாளிகள் ஆயுதத்துடன் வந்தது எப்படி? கொலையாளிகள் ஆயுதங்களுடன் வருவதை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்களா? என பல கேள்விகள் எழுந்தது.

உயர்நீதிமன்றம் கண்டனம்:
இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தது. ஒரே ஒரு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொலையாளிகளை பிடிப்பார் என்ற நிலையில் மற்ற காவலர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? கொலை நடந்ததை விட, கொலை நடந்த இடம் தான் கவலை அளிக்கிறது? காவலர்கள் எப்போதும் செல்போனில் மூழ்கிக் கிடக்கின்றனர் என கண்டனம் தெரிவித்ததோடு, கொலை நடந்த போது பணியில் இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு:
மேலும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு ஆய்வாளர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான பாதுகாப்பு காவலர்களோடு துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் நீதிமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் மூன்று சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் நீதிமன்றங்களை சுற்றிலும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து வருகின்றனர். இதே போல தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications