சென்னையில் இருந்து வந்த 75 வயது முதியவரையும் விட்டுவைக்காத திருநெல்வேலி பானுமதி.. புதிய வழக்கு
திருநெல்வேலி: சமூகவலைதளம் மூலம் பழகி தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறித்துவந்த திருநெல்வேலி பானுமதி,சென்னையில் இருந்து வரவழைத்து முதியவரை காரில் கடத்தி ரூ.3.50 லட்சம் பறித்ததாக புதிய வழக்கு தொடர்ந்துள்ளனர் போலீசார். இதுவரை என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியைச் சேர்ந்த 47 வயதாகும் தொழில் அதிபர் நித்தியானந்தம் தொழில் அதிபர், திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த 40 வயதாகும் பானுமதி என்பவருடன் பேஸ்புக் மூலமாக பழகி வந்தார். முதல் முதலாக நித்தியானந்தத்தை பானுமதி கடந்த 3 மாதம் முன்பு தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் கடந்த 3 மாதங்களாக பேஸ்புக் மூலமாக நண்பர்களாக பழகி உள்ளார்கள். இந்த பழக்கத்தை வைத்து பானுமதி அடிக்கடி நித்தியானந்தத்துடன் பேசி வந்திருக்கிறார்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 29-ந்தேதி பானுமதி ஆசைவார்த்தை கூறி நித்தியானந்தத்தை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதனை நம்பி தொழில் அதிபர் நித்தியானந்தமும் அங்கு சென்றார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த பானுமதியின் கூட்டாளிகள் 4 பேர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து நித்தியானந்தத்திடம், 'எதற்காக இங்கு வந்தாய்?' என்று கூறி மிரட்டி, அவரை வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார்கள்.
அப்போது தொழில் அதிபர் நித்தியானந்தம் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள், கழுத்தில அணிந்து இருந்த 2½ பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தங்க மோதிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றை மிரட்டி பறித்தனர். அத்துடன் நித்தியானந்தத்தின் செல்போன் வங்கி செயலி மூலமாக ரூ.75 ஆயிரத்தை உடனடியாக பறித்துள்ளனர். பின்னர் அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி சென்று, பின் நம்பரை மிரட்டி வாங்கிக்கொண்டு அதன் மூலமாக ரூ.60 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.
பின்னர் நித்தியானந்தத்தை நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகில் உள்ள ஒரு இடத்திற்கு காரில் அழைத்து சென்றனர். அங்கு தங்களுக்கு பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். நித்தியானந்தத்திடம் அவரது வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று, ரூ.10 லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்திருக்கிறார்கள்.
அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நித்தியானந்தம் தன்னிடம் வேலை செய்யும் நபரிடம் செல்போனில் எப்படியோ போராடி தெரிவித்தார். உடனே அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார் தெரிவித்தார். உடனே நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
தொழில் அதிபர் நித்தியானந்தத்தை கடத்தி நகை-பணம் பறித்த பானுமதியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட நித்தியானந்தத்தையும் மீட்டனர். அவரை கடத்தி நகை-பணம் பறித்ததாக பானுமதியின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பார்த்தசாரதி (46), வெள்ளத்துரை (42), ரஞ்சித் (42), ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுடலை (40) ஆகியோரையும் கைது செய்தார்கள்.
போலீஸ் விசாரணையில், அவர்கள் இதேபாணியில் பலரிடம் நகை, பணத்தை பறித்து உல்லாசமாக வாழ்ந்தது உறுதியானது. போலீசார் இதுபற்றி கூறும் போது, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பானுமதி பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை பிரிந்து, பள்ளி தோழரான வெள்ளத்துரையுடன் திருநெல்வேலியில் குடியேறி உள்ளார். பானுமதிக்கு ஆடம்பரமாக வாழ ஆசை வந்துள்ளது.. அதற்காக கடந்த 6 ஆண்டுகளாக பேஸ்புக்கில் தொழில் அதிபர்களிடம் ஆசைவார்த்தை பேசி தங்களது வலையில் வீழ்த்தி பணம் பறித்து வந்துள்ளார். இதற்கு பார்த்தசாரதி, ரஞ்சித், சுடலை ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளார்கள்.. சேலம் நித்தியானந்தத்தை மிரட்டி பணம் பறித்த போது சிக்கி உள்ளார்கள்..
இதனிடையே சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 75 வயதாகும் பரமசிவன் என்ற முதியவர் தனது மகனுடன் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ''பானுமதி என்னிடம் கடந்த 6 மாதங்களாள பேஸ்புக்கில் பழகி வந்தார். அவரை பார்க்க கடந்த மார்ச் மாதம் திருநெல்வேலிக்கு வந்தபோது, பானுமதியும், அவரது கூட்டாளிகளும் என்னை கடுமையாக தாக்கினர்.
பின்னர் காரில் கடத்தி சென்று நான் அணிந்து இருந்த 3 பவுன் தங்க நகைகளையும், ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3.60 லட்சத்தையும் பறித்து கொண்டனர்'' என்று கூறினார். அதன் அடிப்படையில் போலீசார் பானுமதி உள்ளிட்ட 5 பேர் கும்பல் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களிடம் பணம், நகைகளை இழந்தவர்கள் புகார் கொடுக்க முன்வரவேண்டும் என்று திருநெல்வேலி போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications