நாங்குநேரி சம்பவம்: தங்கையுடன் வெட்டுப்பட்ட மாணவனின் தற்போதைய நிலை என்ன? பட்டியலின ஆணையம் பரபர தகவல்
திருநெல்வேலி: சாதி பாகுபாட்டால் நாங்குநேரியில் பட்டியலினத்தை சேர்ந்த மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை சகமாணவர்கள் அரிவாளால் கொடூரமான வெட்டினர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் தற்போதைய நிலை பற்றி பட்டியலின ஆணைய உறுப்பினர் ரகுபதி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா செல்வி. இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். சின்னத்துரை 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சின்னத்துரையை சில மாணவர்கள் சாதிய பாகுாட்டை காட்டியுள்ளனர். படிக்கவிடாமல் இடையூறு செய்ததோடு கடைகளுக்கு சென்று உணவு, டீ வாங்கி வரும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் சின்னத்துரை மனம் உடைந்து பள்ளி செல்லாமல் இருந்தார்.
இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்தது. இந்த கோபத்தில் சில மாணவர்கள் இரவில் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தடுக்க சென்ற தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இருவரும் மீட்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அண்ணனாக சின்னத்துரையின் கல்லூரி படிப்புக்கான செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார். அதோடு சின்னத்துரைக்கு 18 வயது நிரம்பிய பிறகு மக்கள் நல்வாழ்வு துறையில் பணி வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் இன்று தமிழ்நாடு பட்டியலின ஆணையத்தின் சார்பில் அதன் உறுப்பினர் ரகுபதி சிகிச்சை பெற்று வரும் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை சந்தித்து ஆறுதல் கூறி சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தில் இருந்து வந்துள்ளோம். இந்த சம்பவத்தில் அரசு, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்த்தோம். மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து தீர்வு வழங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட கிராமம் மற்றும் பள்ளிக்கு சென்று பார்த்தோம். ஆசிரியர்களை சந்தித்து விசாரித்தோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 2 பேரையும் சந்தித்து நலம் விசாரித்தோம். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் தனிநபர் ஆணையம் அமைத்துள்ளார். அதேபோல் மாவட்ட ஆட்சியரும் இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வு வழங்கும் வகையில் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார்.இது நல்ல முயற்சியாக உள்ளது'' என்றார்.
அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னத்துரை மற்றும் சந்திரா செல்வி ஆகியோரை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது சபாநாயகர் அப்பாவு உடனிருந்தார். சின்னத்துரைக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் நெல்லைக்கு வர உள்ளதாக மா சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications