அதி நவீன தரத்தில் குத்தம்பாக்கம் திரைப்பட நகரம்.. டெண்டர் கோரிய தமிழக அரசு.. பணிகள் விறுவிறு
திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் கோரியது. தேசிய நெடுஞ்சாலை அருகே குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 - 24-ம் ஆண்டுக்கான செய்தித் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட குத்தம்பாக்கம் ஊராட்சியில் அரசு நிலம் 100 ஏக்கர் உள்ளது.

இந்த அரசு நிலத்தில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்க வசதியாக இருக்குமா என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். திரைப்பட நகரம் அமைத்தால் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்ய முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
திரைப்பட நகரம் அமைப்பது குறித்து பல கட்ட ஆலோசனைகளை நடத்திய பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
எம்ஜிஆர் பிலிம் சிட்டி ரூ.5 கோடி செலவில் 4 படப்பிடிப்பு தளத்துடன் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல கமல்ஹாசன் வைத்த கோரிக்கை அடிப்படையில் சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. இந்த நவீன திரைப்பட நகரில் விஎப்எக்ஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 ஸ்டார் ஓட்டல் என சகல வசதிகளும் அமைக்கப்பட உள்ளது என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
இதனையடுத்து திரைப்பட நகரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திரைப்பட நகரம் அமைக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
திரைப்பட நகரத்தில் பெரிய அளவிலான ஸ்டுடியோ, படப்பிடிப்பு அறைகள் VFX, டிவி ஸ்டுடியோ அமையவுள்ளது. பணிமனை, உணவகம், அலுவலகங்கள், டப்பிங், எடிட்டிங், கூட்ட அரங்கம், முதலுதவி அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் கோரியது.
குத்தம்பாக்கத்தில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நிறைவடையும் தருவாயில் உள்ளன. தற்போது திரைப்பட நகரமும் கட்டப்பட உள்ளதால் அந்த பகுதிகள் அதிக அளவில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications