தலைமறைவான ஜெயக்குமார் மகளுக்கு சிக்கல்.. லிஃப்ட் விபத்தில் ‘இன்னொரு பலி’.. போலீசார் தீவிர தேடல்!
திருவள்ளூர்: லிஃப்ட் விபத்தில் பள்ளி மாணவர் ஏற்கனவே பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடந்த லிஃப்ட் விபத்தில் பள்ளி மாணவர் பலியானார்.
இந்த விவகாரத்தில் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா தேடப்பட்டு வரும் நிலையில், மற்றொருவரும் பலியாகியுள்ளதால் ஜெயப்பிரியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயக்குமாரின் மகள் மண்டபம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்ரியா மற்றும் மருமகன் நவீனுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றின்போது உணவு பரிமாறும் வேலைக்காக வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன் சீத்தல், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன் 23, விக்னேஷ் 21 ஆகியோர் லிஃப்டில் இரண்டாவது மாடிக்கு பெரிய பாத்திரத்தில் உணவை கொண்டு சென்றுள்ளனர்.

மாணவன் பலி
அப்போது எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் லிஃப்ட்டின் இரும்பு ரோப் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவன் சீத்தல் தலை நசுங்கி உயிரிழந்தார். லிஃப்ட்டில் இருந்த மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் காயமடைந்த ஜெயராமன், விக்னேஷ் ஆகிய இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

தலைமறைவு
இந்தச் சம்பவம் குறித்து திருமண மண்டபத்தின் உரிமையாளரான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமண மண்டபத்தின் மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் ஒருவர் பலி
இந்நிலையில், திருமண மண்டபத்தில் லிஃப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே பள்ளி மாணவன் தலை நசுங்கி பலியான நிலையில், தற்போது மற்றொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயப்பிரியாவுக்கு சிக்கல்
லிஃப்ட் விபத்தில் மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் குற்றவாளியான ஜெயப்பிரியா தலைமறைவாக இருந்த நிலையில், மற்றொருவரும் பலியாகியிருப்பதால் இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயப்பிரியாவை கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டுவார்கள் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications