ஹைகோர்ட் போட்ட போடால்.. ஆதரவாளர்கள் இல்லாமல் தனியாளாக.. ஆஜரான பூவை ஜெகன் மூர்த்தி!
திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏ-வுமான பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகி இருக்கிறார். உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மீதான விசாரணையின் போது, வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த சூழலில் வழக்கின் விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகி இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதில் பெண்ணின் வீட்டிற்கு ஆதரவாக இளைஞர் தனுஷின் சகோதரரை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறுவன் கடத்தல் வழக்கு
இதுதொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கட்டப் பஞ்சாயத்து செய்வதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பினார்கள்?
லெஃப்ட், ரைட் வாங்கிய நீதிபதி
200, 300 பேர் கூட்டி வந்தால் நீதிபதி பயந்துவிடுவார் என்று நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். உங்கள் பெயரை யாராவது தவறாக பயன்படுத்தினாலும் குற்றம்தான். விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில் திருவள்ளூர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் காவல்துறையின் விசாரணைக்காக பூவை ஜெகன் மூர்த்தி ஆஜராகி இருக்கிறார். நேற்றிரவு முதல் ஏடிஜிபி ஜெயராமனிடம் டிஎஸ்பி தமிழரசி விசாரணை நடத்தினார். அதேபோல் பூவை ஜெகன் மூர்த்தியை சந்திக்க ஏடிஜிபி தனது வாகனத்தில் பெண்ணின் தந்தையுடன் சென்ற சிசிடிவி காட்சிகள் சிக்கி இருக்கிறது.
பூவை ஜெகன் மூர்த்தி ஆஜர்
இதன் மூலமாக பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் மற்றும் பெண்ணின் தந்தை வனராஜா ஆகியோர் சந்தித்தது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி போலீசார் விசாரணைக்கு ஆஜராகி இருப்பதால், கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெகன் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற விவாதமும் தொடங்கி இருக்கிறது.
தனியாக வந்த பூவை ஜெகன் மூர்த்தி
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இருந்து வருகிறது. இவரை விசாரிக்க 2 நாட்களுக்கு முன்பாக போலீசார் அவரின் வீட்டிற்கு சென்ற போது, அவரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வீட்டின் முன் குவிந்தனர். போலீசாரை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காததோடு, 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்தனர். தற்போது அவர் தனியாக காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications