நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு.. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடந்த 126 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.

தொடந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 54 அலகுகளாக பிரித்து 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2,700 ஏக்கர் தரிசு நிலம் எனவும் மீதமுள்ள 326 ஏக்கர் பட்டா நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. போராட்டக்கார்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 126 நாட்களாக காத்திருப்பு போராட்டம், நடைபயணம், மறியல் போராட்டம் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் போராட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி நடைபயணம் சென்ற போது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 7 பேர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications