குழந்தை திருமணம்.. செல்பி எடுப்போர், சீரியல் பல்ப் போடுவோர் கூட சிக்குவார்கள்! ஆட்சியர் வார்னிங்
திருவண்ணாமலை: கடந்த 2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் 55% அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், குழந்தை திருமணங்களில் செல்ஃபி எடுப்பவர்கள், சீரியல் பல்ப் போடுபவர்கள் என அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளார்.
கல்வியிலும், பொருளாதாரத்திலும் தொடர்ந்து முன்னேறி வரும் தமிழகத்தை குழந்தை திருமணங்கள் தொடர்ந்து பின்னோக்கி இழுக்கின்றன. சமீபத்தில் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் சுபாஷினி விஜயகுமார், குழந்தை திருமணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில விவரங்களை பெற்றிருந்தார். அதில் வெளியாகியிருந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அதாவது, தமிழ்நாட்டில் 2024ல் குழந்தை திருமணங்கள் 55% அதிகரித்திருக்கிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி.

2023ம் ஆண்டில் 1,054 குழந்தை திருமணங்களும், 2024ல் 1,640 குழந்தை திருமணங்களும் நடந்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் முதல் 10 மாவட்டங்களில் 6 இடங்களை ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர், தருமபுரி மற்றும் சேலம் என மேற்கு மாவட்டங்கள் பிடித்திருக்கின்றன. கோவை மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் வரை குழந்தை திருமணம் குறித்து 125 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் 35 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. 90 குழந்தைகளுக்கு திருமணம் நடந்திருக்கிறது.
ஈரோட்டை பொறுத்தவரை, 186 புகார்களும், தருமபுரியில் 157, திண்டுக்கல்லில் 165, கடலூரில் 131 புகார்களும் வந்திருக்கின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மேற்கு மாவட்டங்களில் சாதிய கட்டமைப்பு வலுவானதாக இருக்கிறது. எனவேதான் அங்கு குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன என்று கூறுகின்றனர்.
அதாவது, தங்கள் சாதி பெண்கள் வேறு சாதியை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக குழந்தை பருவத்திலேயே திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன என்று கூறுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், "குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போர், சாப்பிட வருவோர், திருமணத்தை புகைப்படம் எடுப்பவர், திருமணத்தில் செல்பி எடுத்துக் கொள்பவர், சீரியல் செட் போடும் நபர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனையும், அபராதமும் உண்டு" என்று எச்சரித்துள்ளார்.
குழந்தை திருமணம், அக்குழந்தைக்கும் அவர் பெற்றெடுக்கும் குழந்தையின் உடல் நலத்திற்கும் நல்லதல்ல என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான குழந்தை திருமணங்கள் பிரசவத்தின்போதுதான் தெரிய வருகின்றன. அதாவது, திருமணம் செய்து வைக்கப்படும் குழந்தைகள் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது அவர் சிறுமி என்பதே தெரிய வருகிறது.
எனவே இதனை முன்கூட்டியே தடுக்க, நீங்கள் உள்ள இடத்திற்கு அருகில் ஏதேனும் குழந்தை திருமணம் நடந்தால் உடனே 1098 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு அது குறித்து புகார் அளியுங்கள். குழந்தைகளை காப்பாற்றுங்கள். குழந்த திருமணங்களை தடுப்பதன் மூலம், நாமும் நாமது சமூகமும் முன்னேறும்.












Click it and Unblock the Notifications