திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. போலீஸாருக்கு கிடைத்த முக்கிய துப்பு.. இருவர் சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளையர்களில் இருவர் சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 ஆம் தேதி ஒரே இரவில் நான்கு இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து அதிலிருந்த ரூ 72.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் உள்ளது. இதிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி ஏடிஎம்மை உடைத்து அதிலிருந்து ரூ 20 லட்சம் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஸ்டேட் பாங்க் ஏடிஎம்
அது போல் திருவண்ணாமலை பெரியார் அரசு பேருந்து பணிமனை அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை உடைத்து 30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. போளூரில் ரயில்வ ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை உடைத்து ரூ 20 லட்சம் கொள்ளை நடந்துள்ளது.

ஒன் இந்தியா ஏடிஎம்
அடுத்தபடியாக கலசப்பாக்கத்தில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம்மை உடைத்து ரூ 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஏடிஎம் மையங்களிலும் ஒரே மாதிரியான கொள்ளை நிகழ்ந்துள்ளது. 4 இடங்களிலும் கேஸ் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி பூட்டப்பட்ட பூட்டுகளை உடைத்துள்ளனர். அதன் பின்னர் உள்ளே சென்று ஏடிஎம் மிஷினை கேஸ் வெல்டிங் மூலம் சேதப்படுத்தி திறந்து அதிலிருந்து பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.

4 இடங்களில் ரூ 75 லட்சம்
ஒரே இரவில் 4 இடங்களில் 72.50 லட்சத்தை கொள்ளையடித்தது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏடிஎம் மையங்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் மும்பையில் உள்ள ஒரு சர்வரில்தான் பதிவாகும். அதை வாங்குவதற்கான முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள்.

4 ஏடிஎம் மையங்கள்
இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து தமிழக ஆந்திர எல்லைகளான கிறிஸ்டியான்பேட்டை, பத்தளப்பள்ளி, சைனகுண்டா உள்ளிட்ட 6 மாநில எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஆரிப் என்ற இளைஞரை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறுகையில் கொள்ளையர்களை பிடிக்க கர்நாடகாவில் கோலார், குஜராத்தில் வதோதரா, ஹரியானா ஆகிய பகுதிகளில் தனிப்படை போலீஸார் முகாமிட்டு 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விசாரணை
இந்த விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் கொள்ளையடித்தவர்கள் அனைவரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பிற மாநிலத்தவரும் உதவியுள்ளனர். முதலில் பெங்களூரில் கோலார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த கொள்ளையர்கள், நோட்டமிட்டு கொள்ளையடிக்க திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். அங்கு கொள்ளையடித்துவிட்டு பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானாவுக்கு தப்பிவிட்டனர்.

ஹரியானா
இவர்களை பிடிக்க ஹரியானா போலீஸார் உதவி செய்து வருகிறார்கள். இவர்கள்தான் செய்தார்கள் என்பதை மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே கொள்ளையர்களை நெருங்கிவிட்டோம், விரைவில் பிடிபடுவார்கள் என ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி கேமரா
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வாகனத்தின் நம்பர் பதிவை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். கொள்ளையை நிகழ்த்துவதற்கு முன்பு கொள்ளையர்கள் ஏடிஎம் மையங்களை நோட்டமிட்ட காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்தன. இந்த சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இரு கொள்ளையர்கள்
இந்த நிலையில் கைதான இரு கொள்ளையர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரியவந்தது.












Click it and Unblock the Notifications