திருவண்ணாமலை கோயிலில் சர்ப்ரைஸ்.. உண்டியலில் இருந்து கோடி கோடியாக கொட்டிய காசு! வாவ் தை மாத பவுர்ணமி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பவுர்ணமி முடிவடைந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதல் நாளே சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். மிகப்பழமையான திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்..

இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படியானால், திருவண்ணாமலையின் வயதை 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிடுகிறார்கள.
சிறப்புகள் - முக்கியத்துவம்
இந்த அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. அந்தவகையில், நடுநாட்டு தலங்களுள் முதன்மையானது இந்த திருவண்ணாமலையாகும்.. பஞ்சபூதத் தலங்களுள் இதனை அக்னித் தலம் என்பார்கள். நால்வராலும் பாடப்பட்ட தலம் இதுவாகும்.
இத்தனை சிறப்புகளை கொண்டதால்தான், திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்ய திரண்டு வருகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டியும் வருவார்கள். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட்டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இப்படி செய்வதால், பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
திரண்டு வரும் பக்தர்கள்
தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் அலைக்கடலென திரண்டு திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேற்றி விட்டால், பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியல்களில் காணிக்கையாகவும் செலுத்துகிறார்கள்.
இந்நிலையில், தை மாத பவுர்ணமி நிறைவடைந்துள்ள நிலையில், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் தற்போது எண்ணப்பட்டுள்ளன..
அதேபோல, கிரிவல பாதையிலுள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் போன்ற அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்களும் எண்ணப்பட்டுள்ளன.. கடந்த 2 நாட்களாகவே கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இந்த உண்டியல்கள் எண்ணும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
தங்கம், வெள்ளி காணிக்கை
அந்தவகையில், தை மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை ரூ.3.52 கோடி முதல்நாளில் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. அதேபோல, 229 கிராம் தங்கம், 1.75 கிலோ வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்னும் முடியவடையவில்லை. எனவே, இன்றையை தினமும் பணிகள் தொடரும் என்றும், அனைத்து உண்டியல்களும் எண்ணி முடிக்கப்பட்டு, மொத்த காணிக்கை குறித்த தகவல் வெளியிடப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications