கருணாநிதி பற்றி அவதூறு.. அதுவும் வைரமுத்து குரலில்..வசமாய் சிக்கிய இளைஞர்.. அதிரடி கைது.. யார் இவர்?
திருவாரூர்: கவிஞர் வைரமுத்துவின் குரலை வைத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்நூலை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வைரமுத்துவின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் வரலாற்றை கவிதையாக தொகுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று x சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.

அதில், வைரமுத்து கருணாநிதியை திட்டுவதை போன்ற காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்தன. இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இளையராஜா புகார் அளித்திருந்தார். புகார் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டு தனிப்படை அமைத்திருந்தார். தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு செந்தில்நாதன் என்பவரை கைது செய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த இவர், LTTS நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், கருணாநிதி குறித்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவதூறு வீடியோவை உருவாக்கி ஷேர் செய்திருக்கிறார். இதனையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்து மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நீதிமன்றம் இவருக்கு பிப்.2ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறது.
சமீப காலங்களாக இது போன்ற அவதூறு கருத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதேபோல இதுபோன்ற கருத்துக்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. அதாவது சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விஜில் ஜோன்ஸ், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக முதல்வர், மூத்த அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பும் கருத்துகளை ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, "கையில் ஒரு செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்து பரப்பிவிட்டு, இப்போது இங்கு வந்து இனிமேல் இதுபோன்ற பதிவுகளை பதிவிடமாட்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரர் சிறைக்கு செல்ல வேண்டும். முன்ஜாமீன மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications