காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமையல்.. திருப்பூரில் மாற்று சான்றிதழ் கேட்ட மக்களால் பரபரப்பு
திருப்பூர்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை உணவு திட்டத்தை பட்டியலினத்தை சேர்ந்த பெண் காலை உணவை சமைத்ததால் அதை புறக்கணித்து தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை தருமாறு திருப்பூர் பகுதி மக்கள் சிலர் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 இல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த திட்டத்தை விரிவுப்படுத்தினார்.

அதன்படி கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதை முதல்வர் திருவாரூரில் திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி ஒரு குழந்தைக்கு 50 கிராம் அளவில் ரவை, கோதுமை, அரிசி, சிறுதானியங்கள் போன்றவை 15 கிராம் பருப்பு, உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் வழங்கப்படுகின்றன. இதை பள்ள மேலாண்மை குழுவினர் ருசி பார்த்த பிறகே குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 47 பேர் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் காலை உணவு திட்டத்தின்படி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த தீபா என்பவர் உணவு சமைத்து பள்ளி மாணவர்களுக்கு பரிமாறியதாக தெரிகிறது. இதை அறிந்த ஒரு தரப்பினர் பள்ளி குழந்தைகளை உணவை சாப்பிட அனுமதிக்காமல் மாற்றுச் சான்றிதழ் கொடுங்கள், வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என கூறி காலை உணவை புறக்கணித்து குழந்தைகளை சாப்பிடவிடாமல் தடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உணவு சமைக்கும் தீபாவை மாற்ற முடியாது என அரசு தரப்பில் தெரிவித்ததால் சமாதானம் செய்தும் உணவை அந்த தரப்பினர் புறக்கணித்து சென்றனர். இந்த நிலையில் தீபா சமைத்த உணவை 34 குழந்தைகள் சாப்பிட்டனர். 13 பேர் பள்ளிக்கு வராமல் விடுத்தனர்.












Click it and Unblock the Notifications